பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திமுகவினர் சிலரின் சொத்துப் பட்டியலை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். அதனை திமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். அதோடு, அண்ணாமலை தங்கள் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி, பகிரங்க மன்னிப்பு மற்றும் மான நஷ்டஈடு வழங்கக் கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனார். அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தமிழக அரசு சார்பில் பதிவு செய்து இருக்கிறார்.
இதனையடுத்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் இன்று அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, ‘‘கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினர் குறித்து பொய்யான அவதூறு தகவல்களைப் பரப்பி இருக்கிறார். இதனை எதிர்த்து திமுக சார்பில் உரிய பதில் கேட்டு வழக்கறிஞர் மூலம் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை இதுகுறித்து அவர் எந்த பதிலும் தரவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்ட்டு இருக்கிறது. மேலும், இன்று டி.ஆர்.பாலு சார்பில் சைதை நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
யார் மீதும் பொய் வழக்குப் போட்டு திமுகவுக்கு பழக்கமில்லை. இதற்கு முன்பு 1962-63 காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மீது பத்திரிகையாளர் நாத்திகம் ராமசாமி, ‘பூம்புகார் திரைப்படத்தை கலைஞர் திமுக கட்சி பணத்தில்தான் தயாரித்தார்’ என்று செய்தி வெளியிட்டிருந்தார். அதனை எதிர்த்து கலைஞர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நாத்திகம் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. அதேபோல அண்ணாமலைக்கும் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்” என ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.