குரூப் 4 மறு தேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்!

குரூப் 4 மறு தேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்!

தேர்வு எழுதி எட்டு மாதங்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து இரண்டாயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும். அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரூப் 4 தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற இரண்டாயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்வு எழுதியவர்களுக்கு இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. உரிய விசாரணை நடத்தி இதில் தவறு ஏதேனும் நடந்திருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com