பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் திமுகவுக்கு எதிர்க்கட்சிபோல் தெரிகிறது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது" எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சுப்பிரமணியன் சுவாமியை சீண்டும் விதமாக பதில் அளித்தார் அண்ணாமலை.
சுப்பிரமணியன் சுவாமி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அண்ணாமலை, நான் போய் சிலர் காலில் விழுந்தால், என்னை பாராட்டிப் பேசுவார்கள். 30, 40 ஆண்டுகளாக இந்த கட்சியை தாங்கி இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அவர்கள் காலில் என்னால் போய் விழ முடியாது. சுப்பிரமணியன் சுவாமிக்கும் இது பொருந்தும் என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, சுப்பிரமணியன் சுவாமி கட்சிக்காக உழைத்ததாக சிலர் சொல்லுகிறார்கள். யார் யாரெல்லாம் கட்சிக்காக உழைத்தார்கள் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு நன்றாகத் தெரியும். “நான் நல்லவனா, திறமையானவனா“ என சுப்பிரமணியன் சுவாமி ஒன்றும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்கத் தேவையில்லை.
மேலும் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது,
என்னுடை பேட்டியை, செய்தியாளர் சந்திப்பை தமிழ் சேனல்கள் எவ்வளவு நேரம் ஒளிபரப்புகிறார்கள் என்று ஒரு அமைப்பு கண்காணித்து வருகிறது. அதிக நேரம் ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட சேனலிடம் விளக்கம் கேட்கிறார்கள் என்றார் அண்ணாமலை.
அதற்கு ஒரு சேனல் நிருபர் உங்களால் நிருபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை வைத்துதான் சொல்கிறேன். என்றார்.
அதற்கு நிருபர் ஆதாரத்தை காட்டுங்கள் என்றார்.
உங்கள் சேனல் உங்களுக்கு சம்பளம் தருகிறார்கள் அல்லவா. நீங்கள்தான் உங்கள் சேனலுக்காக ஆதாரத்தை தேடி பெறவேண்டும் என்றார் அண்ணாமலை.
அண்ணாமலை இப்படி கோபமாக பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சலும் கத்தலுமாக இருந்தது. இது ஒருசில நிமிடம் அங்கு பரபரப்பு நிலவியது.
அதன் பிறகு ஒரு நிருபர், பா.ஜ.க.வில் உள்ள ஒருசிலர் உங்களை எதிர்க்கிறார்களே என்றார்.
கட்சியில் சிலர் என்னை எதிர்க்கிறார்கள், அது நல்லதுதான், வளரும் கட்சி என்றால் அப்படித்தான் இருக்கும். மற்ற கட்சிபோல் பாஜக அடிமைக் கட்சியல்ல. 10ல் 2 பேர் என்னை எதிர்க்கத்தான் செய்வார்கள். எதிர்க்க அவர்களுக்கு உரிமை உண்டு. அதை சமாளிக்க என்னால் முடியும். அதை நான் வரவேற்கிறேன்.
வாரிசு அரசியல் பற்றிய கேள்விக்கு, 18 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சி இது. பாஜகவில் எங்கோ யாரோ ஒருவர் மகன் வேண்டுமானால் பதவிக்கு வந்திருக்க முடியும். அதை வாரிசு அரசியல் என்று கூற முடியாது.
பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் நாங்கள் விரும்புகின்றோம். அது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் தேசிய தலைமையிடம் இருந்து வரவில்லை" எனத் தெரிவித்தார்.
சுப்பிரமணிய சுவாமி பற்றிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம்,
"இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுப்ரமணிய சாமி குறித்து அண்ணாமலை ஆணவத்துடனுடன், மரியாதை குறைவாகவும் பேசி இருக்கிறார்.
குறைந்தபட்சம் அவரது வயது மற்றும் அனுபவத்துக்காவது அண்ணாமலை மரியாதை கொடுத்து இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.