நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவு!

நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவு!

சென்ற மார்ச் மாதம் 14ம் தேதி திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்கள் 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார் பாஜக மாநிலச் செயலாளர் அண்ணாமலை. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலான திமுகவைச் சேர்ந்தவர்கள் பலரின் மீது பல குற்றச்சாட்டுகளையும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த பலரிடம் இருந்து அண்ணாமலைக்கு நீதிமன்ற நோட்டீசுகள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த எந்தக் குற்றச்சாட்டையும் மாற்றிக்கொள்ளவும் முடியாது, மறுக்கவும் முடியாது. எந்த வழக்கையும் சந்திக்கத் தயார் என்று கூறியதோடு, பதில் நோட்டீஸ் அனுப்பி, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் அண்ணாமலை.

அதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் கடந்த 10ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு எட்டு வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 12ம் தேதி கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அந்த மனுவில். ‘நான் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகிறேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்தியஅமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளேன். மேலும் நான் சார்ந்துள்ள கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் எனக்கு மிகுந்த நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை என் மீது அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். அதாவது, எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால், அவர் கூறும் நிறுவனங்களில் மூன்றில் மட்டும்தான் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகக் கூட இல்லை. பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கிரிமினல் அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை மாதம் 14ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com