நடை பயணத்தின் முதல் நாளிலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அண்ணாமலை!

நடை பயணத்தின் முதல் நாளிலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அண்ணாமலை!

மிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று, ‘என் மண் என் மக்கள்’ எனும் முழக்கத்தோடு, ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நடை பயணத்தைத் தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் நேற்று ராமேஸ்வரம் வருகை தந்திருந்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் நகர பாஜக நிர்வாகி முருகன் இல்லத்துக்கு அமைச்சர் அமித்ஷாவை அழைத்து செல்வதென அண்ணாமலையின் நிகழ்ச்சி வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மத்திய அமைச்சர் நேரமின்மை காரணமாக ராமேஸ்வரம் கோயில் தரிசனத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்று விட்டார்.

அதைத் தொடர்ந்து, பாஜக நிர்வாகி முருகன் வீட்டுக்கு அண்ணாமலை தனது கட்சியினருடன் சென்று தேனீர் அருந்தினார். அப்போது முருகனிடம் பேசிய அண்ணாமலை, முருகன் வாடகை வீட்டில் மிகவும் ஏழ்மை நிலைமையில் வசித்து வருவதைக் கேட்டு அறிந்து கொண்டார். அதையடுத்து, உடனடியாக தனது பக்கத்தில் இருந்த ஒரு பாஜக முக்கிய பிரமுகரிடம், ‘‘பக்கத்தில் எங்காவது 3 செண்ட் நிலம் இருந்தா பாருங்கண்ணா. அந்த நிலத்தை பார்ப்பதற்கான பொறுப்பை நீங்க ஏற்றுக்கொள்ளுங்க. நிலத்தை தேர்வு செய்த பிறகு சொல்லுங்க. வாங்கிக் கொடுத்துவிடுவோம்” என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை இப்படிக் கூறுவார் என்று சற்றும் எதிர்பார்க்காத பாஜக நிர்வாகி முருகன், அப்படியே ஆச்சரியத்தில் அசந்து போய்விட்டார். அதுமட்டுமின்றி, தன்னை விட வயதில் குறைந்தவர் அண்ணாமலை என்றபோதிலும், அவருக்கு நன்றி சொல்வதற்காக அவரது காலில் விழ முயற்சி செய்தார் முருகன். அவரைத் தடுத்து நிறுத்திய அண்ணாமலை, ‘அதெல்லாம் கூடாது’ என்று கூறி அவரை தட்டிக்கொடுத்துத் தேற்றினார்.

நடை பயணம் தொடங்கிய முதல் நாளிலேயே பாஜக நிர்வாகிக்கு 3 செண்ட் நிலம் வாங்கிக் கொடுப்பதாக அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, சொந்தக்கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் மனங்களிலும் தனது இமேஜை உயர்த்திக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com