பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடேயே உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கிவைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி மர்மு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சேர்ந்த கூட்டத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்படும்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருகிற பிப். 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தின் முதல் கட்டம் பிப்ரவரி 12 வரை நடைபெறும்.
பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு நிலைக்குழுவினர் பல்வேறு அமைச்சகங்கள் தொடர்பான மானியக் கோரிக்கைகளை பரிசீலிப்பார்கள். பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் தொடர்ந்து மத்திய பட்ஜெட் தொடர்பான விவாதமும் நடைபெறும்.
குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவற்றுக்கு பதிலளிப்பார். பின்னர் நிதியமைச்சரும் விவாதத்துக்கு பதிலளித்து பேசுவார்.
பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் பல்வேறு துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவதாதம் மற்றும் மசோதாக்கள் தொடர்பான விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மக்களவையில் 9 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் 7 மசோதாக்களும், மாநிலங்களவையில் 9 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. பணிகள் முழுவதும் முடிவடைந்துவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.