

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெண்களுக்காக அறிமுகப்படுத்திய பல முக்கிய நலத்திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதியின்படி ரேஷன் கார்டு உள்ள தகுதியான பெண்களுக்கு மாதாமாதம் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் அரசு நகர & மாநகர பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்துடன் ஸ்கூட்டர் , அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி தொடரும் வரை மாதம் ₹1,000,பெண்கள் காவல் உதவி மையங்கள் One Stop Centres (OSC) பெண்களுக்கு தனிப்பட்ட திறன் பயிற்சிகள் ,வேலைவாய்ப்பு முகாம்கள் என பல்வேறு வகைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உயர வழிவகுத்தது.
மேலும் இந்த வருடம் பொங்கல் தொகுப்பில் தரும் 3000 ரூபாய் மக்களிடையே மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக தற்போது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதையும் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதையும் அறிவோம்.
இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகளிருக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் 'இனிப்பான' செய்தியை அறிவிக்க உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி 44ஆவது வார்டில் திமுக சார்பில் மும்மத பெண்களின் சமத்துவ பொங்கல் விழா நேற்று (ஜனவரி 11) நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவப் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பேசியதாவது, "தைப் பொங்கலை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். அது நிச்சயம் இனிப்பான செய்தியாக இருக்கும். பெண்களுக்குப் பொங்கல் பரிசு காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ’’திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது. தனிப்பட்ட முறையில் ஆட்சிதான். அதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்’’ என்றும் அமைச்சர் பெரியசாமி கூறி இருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் களம் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண்களின் வாக்கு வங்கி பலம் வாய்ந்ததாக இருப்பதால், அதனை இலக்காகக் கொண்டே இத்தகைய அறிவிப்புகள் வெளியாவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எது எப்படியோ, மகளிரை மகிழ்ச்சிப்படுத்தும் அந்த 'இனிப்பான செய்தி' என்னவாக இருக்கும் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.எப்படி இருந்தாலும் மகளிரை மகிழ்ச்சிப்படுத்தும் எதுவும் வரவேற்கத்தக்கது. அமைச்சர் குறிப்பிட்ட அந்த இனிப்பான செய்திக்காக நாமும் காத்திருப்போம்.