இந்திய சீனா எல்லைப் பிரச்னைக்கு இன்னொரு தீர்வு - வருகிறது "வைப்ரண்ட் வில்லேஜ்"

இந்திய சீனா எல்லைப் பிரச்னைக்கு இன்னொரு தீர்வு - வருகிறது "வைப்ரண்ட் வில்லேஜ்"

இந்தியாவின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த 4800 கோடி ரூபாயில் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. வைப்ரண்ட் வில்லேஜ் புரோகிராம் என்னும் பெயரில் இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள நான்கு மாநிலங்களில் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குள் செயல் வடிவம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்திலிருந்து தொடங்கி சீன எல்லையில் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை பணியில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் உள்ள பாதைகளில் 2966 கிராமங்களை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ராணுவத் துருப்புகளை லடாக் பகுதியிலிருந்த அழைத்து வரவும், இந்தியாவின் மற்ற பகுதிகளோடு தொடர்பில் இருக்கவும், சீன எல்லையை பாதுகாக்கவும் இவை உதவி செய்யும். பொதுமக்களை எல்லைப் பகுதியில் குடியமர்த்துவதன் மூலமாக எல்லையில் நிலவும் பதட்டங்களையும் தவிர்க்க முடியும்.

இது தவிர சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு புதிய திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகளும் வாழ்வாதாரமும் கிடைக்கும். இதன் மூலம் வேலை தேடி புலம் பெயர்வது தடுக்கப்பட்டு, தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊரிலேயே இருக்க முடியும்.

உள்ளூர் தொழிலாளர்களுக்கு விவசாயப் பணிகளை வழங்கவும், சிறுகுறு கடன்களை வழங்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. நபார்ட் வங்கிகள் மூலம் கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 662 கிராமங்கள் உருவாக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். ஒரு பக்கம் புதிய கிராமங்களை உருவாக்கி, வேலை தேடி புலம் பெயர்வதை தடுப்பது. இன்னொரு புறம் இந்திய, சீனா எல்லையை பொருளாதார ரீதியாகவும், ஆட்கள் நடமாட்டமுள்ள வளமான பகுதிகளாகவும் மாற்றியமைப்பது என ஏராளமான நோக்கங்களுடன் கூடிய வைப்ரண்ட் வில்லேஜ் நல்ல திட்டம் என்கிறார்கள், விமர்சகர்கள்.

சீனா எல்லையில் புதிய கிராமங்கள் உதயமானது சாட்டிலைட் டி.விகளில் தெரிந்தால் இனி பதட்டமடைய தேவையில்லை. இனி இந்திய எல்லையிலும் அதே போன்று புதிய குடியிருப்புகளையும் தரமான சாலைகளையும் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருப்பதாக டெல்லி பா.ஜ.க வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com