கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் அமைச்சர் பதவியில் இருந்தபோது, தனது வருமானத்துக்கு அதிகமாக 127 கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது குற்றம் சாட்டி இருந்தது. அதைத் தொடர்ந்து, சென்ற 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, மன்னார்குடி, திருவாரூர் போன்ற இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தனது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இன்பன், இனியன் மற்றும் நண்பர்கள் சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, உதயன் ஆகிய ஆறு பேரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தக் குற்றப்பத்திரிக்கையுடன் பெட்டி பெட்டியாக 18,000 ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. ஏற்கெனவே சென்ற மாதத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது சொத்து குவிப்பு சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.