தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ரவி என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் கூட நடைபெற்றது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அதில் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மானியம் உரிய நபருக்கு கிடைப்பதை உறுதி செய்யவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக் கொண்டதாக வாதிடப்பட்டது. மேலும் இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் விளக்கம் அளிக்க பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் கொள்ளை முடிவில் தலையிட விரும்பவில்லை என வழக்கை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சீராய்வு மனு தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை கிட்டத்தட்ட இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. பலர் ஆதாரை இணைக்காததால் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.