கடத்தப்பட்ட குழந்தையை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு குவியும் பாராட்டு!

கடத்தப்பட்ட குழந்தையை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு குவியும் பாராட்டு!

டிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவரது மனைவி கமலினி. பல்லடம் கே.அய்யம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார் அர்ஜுன். நிறைமாத கர்ப்பிணியான கமலினி, கடந்த 22ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கமலினி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் அவருக்குப் பக்கத்தில் கருச்சிதைவு காரணமாக சிகிச்சை மேற்கொள்ள வந்த எஸ்தர் ராணி என்ற பெண்ணும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எஸ்தர் ராணிக்கு உதவியாக உமா என்ற பெண்ணும் அவருடன் இருந்துள்ளார். பக்கத்துப் பக்கத்து படுக்கை என்பதால் கமலினியின் குழந்தையையும் உமா கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், உமா தனது மனைவிக்கு உதவி செய்வதால் அர்ஜுன் தனது வேலையை கவனிக்கச் சென்று இருக்கிறார். மாலை வேலை முடிந்து மனைவியைக் காண மருத்துவமனைக்கு வந்த அர்ஜுன், மனைவியின் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு, ‘குழந்தை எங்கே’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு கமலினி, ’குழந்தையை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க உமா வாங்கிச் சென்றுள்ளதாக’க் கூறி இருக்கிறார்.

இதற்கிடையில் பக்கத்துப் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியையும் காணவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அர்ஜுன், இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்கும் இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு உமாவும் இல்லை. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அர்ஜுன், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையைக் காணவில்லை எனவும், பக்கத்து படுக்கையில் இருந்தவர்களே குழந்தையைக் கடத்திச் சென்று விட்டனர் எனவும் கூறி இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தப் புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துகுச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதோடு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தினர். பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்களே குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீஸார், அவர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அந்த போன் கடைசியாக விழுப்புரத்தில் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளதை போலீசார் ஆய்வில் கண்டுபிடித்தனர். இதனால் அவர்கள்தான் குழந்தையைக் கடத்தி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதோடு, குழந்தையைக் கடத்திச் சென்றதாக பெண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீஸார் தேடி வந்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், கமலினிக்கு உதவி செய்வது போல் நடித்து குழந்தையைக் கடத்திச் சென்ற உமா என்ற பெண்ணை கள்ளக்குறிச்சி அருகே போலீஸார் மடக்கிப் பிடித்து, அவரிடமிருந்த அர்ஜுன் கமலினி குழந்தையை மீட்டதோடு,  உமாவையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து மூன்று நாட்களே ஆன இந்தக் குழந்தை கடத்தல் விவகாரத்தில் விரைவாகச் செயல்பட்டு குழந்தையை பன்னிரண்டு மணி நேரத்தில் மீட்டிருக்கும் காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com