காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசிடமிடமிருந்து ஒப்புதல் பெற்று, நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்போவதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏராளமான வாக்குறுதிகளை தந்த காங்கிரஸ் கட்சி, அவற்றையெல்லாம் நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. முதல் கட்டமாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேகதாது அணைக்கட்டு திட்டம் பத்தாண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும் இம்முறை ஒப்புதல் பெறப்பட்டு, திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அணை கட்டும் பணிகளை ஆரம்பித்தால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்த முடியும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கூட்டணியின் அங்கம் வகிக்கும் தி.மு.கவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் மேகதாது விஷயத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் முனைப்பு காட்டி வருகிறார்கள். தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அணை கட்டுவது குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள முதல்வரும் நிதியமைச்சருமான சித்தாராமையா, மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேகதாது பகுதியை சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்துக்கான அனுமதி பரிந்துரை உள்ளிட்ட விஷங்கள் குறித்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டவர் அணை கட்டவதற்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என முதல்வர் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டள்ளார்.
அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்து தி.மு.கவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றிருந்தார். இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரியும் பரஸ்பரம் அறிக்கை மூலம் பரபரப்பை கிளப்பினார்கள். இந்நிலையில் முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது அணை கட்டுவது பற்றி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது