தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரம் பற்றிய கேள்வி எழுப்பி அதன் விலை பற்றி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
நான் சொன்ன மாதிரி ஏப்ரல் 14-ந்தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் எனக்கு வரும். நான் சொன்ன கணக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சொல்லி உள்ளேன். ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
மேலும், சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும். ஒரு பென் டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் பிரதிபலிக்கும் என தெரிவித்திருந்தார். மேலும் 10 ஆண்டு கால வங்கிக் கணக்குகளுடன், அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.