வரலாற்று சுற்றுலா தளங்களை இரவு 9 மணி வரை பார்வையிட அனுமதி:மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு!

வரலாற்று சுற்றுலா தளங்களை இரவு 9 மணி வரை பார்வையிட அனுமதி:மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு!

மாமல்லபுரம் செல்பவர்கள் மாலை ஆறு மணிக்குள் கடற்கரை கோயில் , ஐந்து ரதம் உள்ளிட்டவற்றை அவசர அவசரமாக பார்க்க வேண்டியிருந்தது.  சென்னையிலிருந்து மதியத்திற்கு மேல் கிளம்பி மாமல்லபுரம் வருபவர்களால் பல்லவர்களின் கலைச் சின்னங்களை முழுமையாக கண்டு ரசிக்க முடியாத சூழல் இருந்து வந்தது

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், வரலாற்று இடங்களை முன்னர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்டது.  வழிபாட்டுத் தலங்கள் தவிர பெரும்பாலான தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மாலை 6 அணிக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை.

கடந்த 2019ல் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்தபோது, அனைத்து புராதன சின்னங்களும் மின்னொளியால் அலங்கரிப்பட்டன. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் மட்டுமல்லாது, ஐந்து ரதங்கள், அர்ஜீனன் தபசு, கோவர்த்தன கிரி சிற்பத்தொகுதி உள்ளிட்டவையும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இரவு நேரங்களில் மின்னொளியுடன் கூடிய லைட்டிங்கில் கடற்கரைக் கோயிலை கண்டு ரசிக்க ஏராளமான பயணிகள் வந்தார்கள். எனினும், ஆறு மணிக்கு மேல் கோயில் உள்ளே வர அனுமதியில்லை. ஆனாலும்,  சற்று தொலைவு வரை உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி தரப்பட்டிருந்தது. சீன அதிபர் விஜயத்திற்கு பின்னர் அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

கொரானா தொற்று பரவல் காலத்தில் வரலாற்றுச் சின்னங்களை பார்வையிடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. பின்னர்  மல்லபுரத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்ட சர்வதேச நிகழ்வுகளின் போது, மீண்டும் கடற்கரைக் கோயில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட், ஜி 20 தொடர்பான நிகழ்வுகள் நடந்தபோது பல்லவர்களின் புராதன சின்னங்களை  இரவு நேரங்களிலும் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டது.

சமீபத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, உள்நாட்டு பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பார்வையாளர் நேரம் நீட்டிப்பை அறிவித்துள்ளது. இதன் படி வரும் 15ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களை காலை 6 மணி முதல் இரவு  9 மணி வரை கண்டு களிக்கலாம்.

மாமல்லபுரம் மட்டுமல்லாத தமிழ்நாட்டில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 இடங்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது. குறிப்பாக கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பெருமகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com