பணியாளர்களை கொத்தடிமைகளாக்கும் 12 மணி நேர பணிச் சட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு தாக்கல் செய்த, தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை 12 மணி நேரம் பணி செய்ய வகை செய்யும் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு சட்டத்திருத்த) முன்வரைவு 2023 தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பறித்து, அவர்களை கொத்தடிமைகளாக்கும் இந்த சட்டத் திருத்தம் தவறானது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 1948-ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி ஒரு நாளைக்கு 8 & 9 மணி நேரம் என வாரத்திற்கு 48 மணி நேரம் பணி செய்ய வேண்டும்.
இந்த வழக்கத்தை மாற்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என 4 நாட்களில் 48 மணி நேரம் பணி செய்ய வேண்டும்; மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒவ்வொரு நாளும் கூடுதலாக பணி செய்த நேரத்திற்கு உரிய ஊதியத்தை தனியாக பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தின் அடிப்படை ஆகும்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரச் சட்டம் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படாது; விருப்பமுள்ள தொழிலாளர்கள் மட்டும் 12 மணி நேர பணி முறையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விளக்கங்களும், விதிகளும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும். காலப்போக்கில் அனைத்து பணியாளர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் பணி செய்யும் படி கட்டாயப்படுத்தப் படுவார்கள்.
அதற்காக அவர்களுக்கு கூடுதல் ஊதியம் எதுவும் வழங்கப்படாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து கொத்தடிமைகளாக்குவது தான் இந்த சட்டத்திருத்தத்தின் விளைவாக இருக்கும்.