நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே அஜித் படங்கள் ஆக்சனுடன் பாசமும் கலந்து குடும்பப்பாங்காக இருப்பதால் அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி மக்களிடமும் குடும்பத்துடன் சென்று ரசிக்கும் ஆவல் இருக்கும். இந்த முறையும் இன்று வெளியாகும் துணிவு திரைப்படம் குறித்து அறியவும் பார்க்கவும் அதிக ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த ஆவல் திரைப்படத்தின் டிக்கெட்டுகளையே திருடும் அளவுக்கு வந்துள்ளதை என்னவென்று சொல்ல? இதை அஜீத் அறிந்தால் மெச்சுவாரா? அல்லது உள்ளுக்குள் மகிழ்ந்து கண்டிப்பாரா?
அதிலும் நற்பணி மன்றத்திலேயே திருட்டு என்றால்? இந்த ருசிகர சம்பவம் நடந்தது வேலூர் மாநகரில்தான். துணிவு திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு திரையரங்கு முன் பேனர் வைப்பது, படம் வெற்றிகரமாக வேண்டி போஸ்டர் ஓட்டுவது போன்ற முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்படத்தின் முன்னுரிமை காட்சிக்காக தரப்படும் ரசிகர் மன்ற டிக்கெட்டுகளைப் பெற வேலூர் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் கடுமையான போட்டி நிலவி வருவதும் அறிந்ததே.
இந்நிலையில்தான் வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கி வரும் வேலூர் மாவட்ட அஜீத்குமார் தலைமை நற்பணி இயக்க அலுவலகத்தில் டிக்கெட்டுகள் திருடு போயுள்ளது. நற்பணி இயக்க தலைவரான சுரேஷ்குமார் நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
நற்பணி மன்றப் பணிகளை முடித்துவிட்டு காலை 10 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது அலுவலக மேசையின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிவு திரைப்பட 150 ரசிகர் மன்ற சிறப்பு காட்சி டிக்கெட்டுகள் டிக்கெட் விற்பனை செய்த பணம் ரூபாய் 16,000 திருட்டு போயிருந்தது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு சுரேஷ்குமார் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
எத்தனையோ விதமான திருட்டுகளை பார்த்துள்ளோம். கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இந்த திரைப்படத்தின் டிக்கெட்டுகள் திருட்டு மக்களிடம் உள்ள திரைப்பட மோகம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. விலை கொடுத்து வாங்க முடியாத வறுமையில் உள்ளவனுக்கு திருடியாவது படத்தைப் பார்த்து விட வேண்டும் எனத் தோன்றியதோ?...