சர்க்கரை மாற்றுக்கான WHO வழிகாட்டுதல்கள் மிகைப்படுத்தப்பட்டவையா?

சர்க்கரை மாற்றுக்கான WHO வழிகாட்டுதல்கள் மிகைப்படுத்தப்பட்டவையா?

உடல் எடையைக் கட்டுப்படுத்த அல்லது தொற்று அல்லாத நோய்களின் அபாயத்தைக் குறைக்க செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை நாடு முழுவதும் உள்ள மூத்த மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் " இது மிகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை" என்று குறிப்பிட்டுள்ளனர்.

WHO வெளியிட்டுள்ள பொது சுகாதார எச்சரிக்கைக்கு போதிய அறிவியல் தரவுகளோ, வழிகாட்டுதல்களோ இல்லாத நிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறினர்.

வழிகாட்டுதல்கள் முறையான மதிப்பாய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டவை. "ஆனால் இதைச் செய்வதற்கான பெரிய அளவிலான ஆய்வுகள் எங்களிடம் இல்லை. இந்த மாற்றீடுகளின் விளைவு பற்றி வெளியிடப்பட்ட ஆராய்ச்சி சிறிய மாதிரிகளில் செய்யப்பட்டது. அதாவது ஆரம்ப கட்டமாக எலிகள் மீதான ஆய்வுகளின் முடிவுகள் அத்தகைய சுகாதாரக் கொள்கைகளுக்கு உடனடி ஆதாரமாக இருக்க முடியாது" என்று விஞ்ஞானி பி சேசிகரன் கூறினார். இவர், ஹைதராபாத்தில் உள்ள ICMR-National Institute of Nutrition இன் முன்னாள் இயக்குனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் பிரபலமான ஜீரோ-கலோரி சர்க்கரைக்கு மாற்றாகக் கருதப்படும் எரித்ரிட்டாலை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கான காரணிகளாக கருதி அதைப் புறக்கணிக்கச் சொல்லி எச்சரித்தனர். ஆனால் எரித்ரிட்டால் தான் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுத்தது என்பதை விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியவில்லை. ஆய்வில் பங்கேற்பவர்களுக்கு இருதய நோய் அல்லது அந்நோய் தாக்குவதற்கான பல ஆபத்து காரணிகள் இருந்ததால் அதற்கான தரவு வலுவற்றது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

"இதுபோன்ற தயாரிப்புகளை டைப் 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக் கட்டிகள் உண்டாகக் கூடிய ஆபத்துடன் தொடர்புபடுத்தும் பல ஆய்வுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் சீரான ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை" என்று புது தில்லியைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பி நிபுணர் டாக்டர் அம்ப்ரிஷ் மித்தல் கூறினார்.

WHO வின் இத்தகைய எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு போதுமான ஆதாரங்கள் வலுவானதாக இல்லாத நிலையில் அவை தேவையற்ற பீதியைத் தூண்டுகின்றன என்று சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நிபுணர் டாக்டர் வி மோகன் கூறினார். எடை இழப்புக்கு சர்க்கரை மாற்றுகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் அல்லது மருத்துவ உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லை.

"கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். சர்க்கரைக்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் அல்லது இந்த மாற்றுகளின் சொட்டுகள் தீங்கு விளைவிக்காது. நாங்கள் மக்களுக்குச் சொல்வது என்னவென்றால், சர்க்கரை இல்லாததால் பத்து கப் காபி அல்லது பல டயட் சோடாவைக் குடிக்க வேண்டாம். அவை கலோரிகளை சேர்க்கின்றன. இங்கே கூட பிரச்சனை தயாரிப்பில் இல்லை, ஆனால் உணர்வில் உள்ளது," என்று அவர் கூறினார்.

உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மீது அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் இடைக்கால முடிவுகள், இந்த தயாரிப்புகளின் பயன்பாடு தீங்கு விளைவிக்காமல் இருக்கலாம் என்று டாக்டர் மோகன் கூறினார். ஜூன் மாதம் அமெரிக்க நீரிழிவு சங்கம் ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்த ஆய்வின் விவரங்கள் வெளியிடப்படும், என்றார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com