

நம் நாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடனை வாங்கி கொண்டு 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தொழிலதிபரான விஜய் மல்லையா கடனை திரும்ப செலுத்தாமல் தப்பியோடினார்.
இதனால் மல்லையாவை மத்திய அரசு "தப்பியோடிய பொருளாதார குற்றவாளி" என அறிவித்ததோடு,நாடு கடத்தும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தன்னை 'தப்பியோடிய பொருளாதார குற்றவாளி' என மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்த நிலையில் கடந்த வாரம் இதை விசாரித்த தலைமை நீதிபதி, ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அங்காட் தலைமையிலான அமர்வு விஜய் மல்லையாவிடம்," முதலில் நீங்கள் இந்தியா திரும்புவீர்களா? இல்லையா? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.அப்போதுதான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் "என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
"பிரிட்டனில் உள்ள நீதிமன்றங்கள் சர்வதேச பயணம் செய்வதற்கு தடை விதித்துள்ளதால் தன்னால் எப்போது இந்தியா வர முடியும் என்பதை உறுதியாக கூற முடியாது. மேலும் இந்திய பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு வரும் தேதியை என்னால் துல்லியமாக கூற முடியாது" என வழக்கறிஞர்கள் மூலம் விஜய் மல்லையா உயர் நீதிமன்றத்தில் நேற்று பிப்ரவரி 18 பதில் தாக்கல் செய்தார்.
விஜய் மல்லையாவின் பதிலை ஏற்காத நீதிபதிகள்," நீங்கள் நீதிமன்ற நடைமுறைகளை தவிர்ப்பதாக பதிவு செய்ய வேண்டி இருக்கும். மேலும் வழக்கின் விசாரணையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது .
பிரிட்டன் நீதிமன்றம் விதித்த உத்தரவுகளை காரணமாக காட்டி பதில் கூறும் நீங்கள், அவற்றை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளீர்களா? என விஜய் மல்லையாவுக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்தியாவிற்கு திரும்புவது குறித்து முறையாக பிரமாண பத்திரம் (Affidavit) தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
யார் இந்த விஜய் மல்லையா?
விஜய் விட்டல் மல்லையா, இந்தியாவின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான 'யுனைடெட் ஸ்பிரிட்ஸ்' (United Spirits) நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும், 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனராகவும் இருந்தவர். மேலும் சனோபி (Sanofi), பேயர் (Bayer) உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியப் பிரிவுகளுக்குத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.