AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, பல சிக்னல் கம்பங்கள் உள்ள இடங்களில் போக்குவரத்து போலீசார் செயல்பாட்டில் இருக்கிறார்கள். இதனால் ஒரு சிக்னல் கம்பத்திலிருந்து மற்றொரு சிக்னல் கம்பத்திற்கு தொடர்பு இல்லாமல் இருப்பதால், ஒவ்வொரு சிக்னலிலும் வாகனங்கள் நின்று செல்லும்படியான சூழல் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை போக்குவரத்து தகவல் மேலாண்மைப் பிரிவுகளில், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சிக்னல்கள் பல இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
இதனால் அதிக வாகன நெரிசல் உள்ள இடங்களில், சிக்னலில் பச்சை நிறமானது அதிக நேரம் எரியும். குறைவான வாகன நெரிசல் உள்ள இடங்களில், அதற்கு ஏற்றார்போல பச்சை சிக்னலின் நேரம் குறைவாக இருக்கும். இது வழித்தடங்களில் எம்மாதிரியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை தானாகவே கணக்கீடு செய்து, அதற்கு ஏற்றவாறான சிக்னலில் நேரத்தை தானே நிர்ணயம் செய்து செயல்படும். இதன் மூலம் ஒவ்வொரு சிக்னல் கம்ங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்த முடியும் என்பதால், வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சிக்னலிலும் நின்று சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் விஐபி வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரத் தேவைக்கும் சிக்னல் தானாகவே பச்சை நிறத்தில் மாறும் வசதியும் இதில் இருக்கிறது.
இதற்காக 165 சிக்னல்களில் சாலை கட்டமைப்பையே மாற்றியமைக்க உள்ளனர். மேலும் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் சென்சார்கள், கேமராக்கள் என 50 போக்குவரத்து சந்திப்புகளில் பொருத்தப்பட உள்ளது. வாகனங்கள் செல்லும் வேகத்தைப் பதிவு செய்யும் கருவியும் 10 இடங்களில் பொருத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் சாலை விதிகளை மீறுவோரை உடனடியாக கண்காணித்து, இணைய வழியிலேயே அபராதத்தை வாகன உரிமையாளருக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப முடியும் என்று கூறுகிறார்கள். அதிக விபத்து நடக்கக்கூடிய இடங்கள், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகள் என 58 இடங்களில் கேமரா மூலம் கண்காணித்து, செயற்கை நுண்ணறிவானது கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் என சொல்லப்படுகிறது.
சென்னையில் ஒட்டுமொத்த போக்குவரத்து நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் அமர்ந்தபடியே கண்காணிக்கும் வகையில், சென்னை காவலர் ஆணையம், பிரத்தியேகமான கட்டுப்பாடு அறையும் அமைக்கவுள்ளது. 17 இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் அமைத்து, எந்த இடத்தில் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது, எங்கே குறைவாக உள்ளது, ஒரு இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்ற தகவலையும் உடனடியாக வாகன ஓட்டிகள் அறியும் வகையில் திரையிட்டுக் காட்டப்படும். மேலும் இந்த டிஜிட்டல் போர்டுகளைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ளலாம் என்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து, 2940 சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அனைத்திலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளது. மேலும் 71 பேருந்து நிலையங்கள் மற்றும் 532 பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் விவரம் அடங்கிய டிஜிட்டல் பலகை அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக எந்த பேருந்து எங்கு செல்கிறது என்பதை பயணிகள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
இதனால், ரயில் நிலையங்களில் ரயிலின் விவரங்கள் முன்கூட்டியே அறிவிப்பது போல, பேருந்து நிறுத்தங்களில் பேருந்து நேரம், தற்போது அந்த பேருந்து எங்கு இருக்கிறது போன்ற விவரங்களை பயணிகள் அறிந்து தனது பயணத்தை நல்ல முறையில் திட்டமிட முடியும். இதை ஸ்மார்ட்போன் செயலி வாயிலாகவும் அறியும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் மெட்ரோ ரயிலில் அறிவிப்பது போல், பேருந்தில் பயணிப்பவர்கள் தான் இருக்கும் இடம், இறங்கும் இடம் குறித்த அறிவிப்பு, ஒவ்வொரு பேருந்து நிறுத்தம் வாரியாக அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
இதுசார்ந்த பணிகள் 31 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்களின் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் ஏற்கனவே இந்தியாவின் சில நகரங்களில் இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் சென்னையில் தான் முதன்முறை செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.