
யுபிஐ பயன்பாட்டின் போது பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை ஒரு நாளில் அதிகபட்சமாக 50 முறை வரை தான் அறிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உலகத்தில், பணப்பரிவர்த்தனை என்பதும் டிஜிட்டல் ஆகிவிட்டது. சிறிய பூக்கடை முதல் பெரிய கடை வரை பயனர்கள் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. இந்த நிலையில், யுபிஐ மூலம் Google Pay, Paytm, PhonePe போன்றவற்றைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்வதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதுகுறித்து இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
யுபிஐ முறையில் மீண்டும் மீண்டும் கோரிக்கைகளை வழங்குவதன் மூலம் நெட்வொர்க்கில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, கணினி செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக NPCI தெரிவித்துள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காக, யுபிஐ பயன்பாட்டின் போது பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை ஒரு நாளில் அதிகபட்சமாக 50 முறை வரை மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்குப் பிறகும் பயனர்களுக்கு வங்கி இருப்புத் தொகையைத் தெரிவிக்க வேண்டும் என்று NPCI வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி, பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரு நாளில் 25 முறை மட்டுமே சரிபார்த்துக் கொள்ள முடியும். இதுபோன்ற இன்னும் சில புதிய விதிகள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
இந்த புதிய விதிகள் யுபிஐ பரிவர்த்தனைகள் மிகவும் சீராக நடைபெற உதவும் என்றும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் NPCI நம்புகிறது. பயனர்கள் இந்த மாற்றங்களை அறிந்து கொண்டு தங்களின் யுபிஐ பயன்பாட்டில் மாற்றங்களை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. புதிதாக விதிக்கப்படும் இக்கட்டுப்பாடுகள் யுபிஐ மூலமான நிதி பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாகவும், முறையாகவும் மாற்றும் என்று NPCI நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் பயனர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்படும் என்றும், வங்கிகளும் இதை உறுதி செய்ய வேண்டும் என்றும் NPCI அறிவுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த மாற்றங்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதில் NPCI உறுதியாக உள்ளது.