களக்காடு முண்டந்துறையில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை!

களக்காடு முண்டந்துறையில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை!

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் வட்டக்கானல் வனப்பகுதியில் அரிக்கொம்பன் எனும் காட்டு யானை நடமாட்டம் அதிகம் இருந்தது. ரேஷன் கடைகளை நொறுக்கி, அங்கிருந்த அரிசியை அது விரும்பிச் சாப்பிட்டதால் இதனை கேரளாவில் அரிக்கொம்பன் என்று அழைத்தனர். பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இது இருந்ததால், வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி போட்டு தமிழக எல்லைப் பகுதியான பெரியாறு புலிகள் காப்பகம் முல்லைக்கொடி வனப்பகுதியில்  விட்டனர். அதோடு, இதன் நடமாட்டத்தை கண்காணிக்க இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் ஒன்றைப் பொருத்தி இருந்தனர்.

இந்த யானை மேகமலை வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்ததால், சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, இந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் மாவட்ட அளவிலான அதிகாரிகள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதோடு, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. அதையடுத்து அந்த யானை மீண்டும் மேகமலை பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அதையடுத்து, கடந்த சில நாட்களாக சண்முகா நதி அணை, நாராயணத்தேவன்பட்டி என இந்த யானை இடம் மாறிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை எரசக்க நாயக்கனூர் அருகே பெருமாள்கோயில்பட்டி எனும் பகுதிக்கு யானை வந்தபோது, கால்நடை மருத்துவர்கள் இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி மயக்கமுற வைத்தனர். அதனையடுத்து, கும்கி யானைகள் மூலம்  அரிக்கொம்பன் யானை லாரியில் ஏற்றப்பட்டு, களக்காடு வனப்பகுதியில் விடப்படுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. இந்த அரிக்கொம்பன் யானை பொதுமக்களுக்கு பெரிய தொல்லை கொடுத்தாலும், பொதுமக்கள் பலரும் வழிநெடுகிலும் கை அசைத்து அதனை வழி அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த யானைக்கு துதிக்கை மற்றும் உடலின் பல பகுதிகளில் காயம் உள்ளதால் அதற்கு சிகிச்சை செய்த பிறகே வனப்பகுதியில் விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். யானை பிடிபட்டதால் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

அரிக்கொம்பன் யானை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இந்த யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் விடப்படவுள்ளதாகவும், இந்த யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதற்கிடையில், கேரளாவில் எட்டு பேரை கொன்ற யானையை களக்காடு பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'கொலைகார யானையை விடுவதற்கு எங்கள் பகுதிதான் கிடைத்ததா? மேலே விடப்பட்ட யானை இன்னும் ஒரு மணி நேரத்தில் கீழே வந்துவிடும' எனக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com