"சதி முறியடிக்கப்பட்டது.. நீதி வென்றது..!" - நீதிமன்ற வாயிலில் கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்..!

Aravind kejriwal
Aravind kejriwalimage source:NDTV
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோரை விடுவித்து டெல்லி ரவுஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தவறான விசாரணையை மேற்கொண்டதாக சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கில் மதுபான கொள்கையில் சதி நடந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மணீஷ் சிசோடியா தரப்பில் எந்த ஒரு குற்ற நோக்கமும் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருவரையும் முழுமையாக விடுவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். தான் நிரபராதி என்பதற்கு இதுவே சாட்சி என்றும் குறிப்பிட்டார்.

கெஜ்ரிவால் முதல்வராக இருந்த பொழுது, கடந்த 2021 ஆம் ஆண்டில் டெல்லியில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்தது. அதற்கு முன்பு அரசே மதுபானங்களை விற்று வந்த நிலையில் அதை மாற்றி தனியாருக்கு அனுமதி கொடுத்து, அதற்குத் தனியாக லைசென்ஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் இதில் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒருவர் சிறையிலிருந்துகொண்டு முதலமைச்சராகப் பணியாற்றியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபான கொள்கையில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரமே இல்லை என்றும், ஊகத்தின் அடிப்படையில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்று நீதிபதி ஜிதேந்தர் சிங் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியது.

ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல் மந்திரியாக இருந்த கெஜ்ரிவால் 156 நாட்களும், துணை முதல் மந்திரியாக இருந்த சிசோடியா 530 நாட்களும் சிறையில் இருந்துள்ளனர். இதற்கு கடும் கண்டனத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்டவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார். நேர்மையின் மூலமாகவும், கடின உழைப்பின் மூலமும் தான் மக்களின் நம்பிக்கையை சம்பாதித்ததாகவும் அதற்கு கிடைத்த வெற்றி தான் இது என்றும் குறிப்பிட்டவர், ஒவ்வொரு ஆட்சியையும் கவிழ்க்காமல் மக்களுக்கு சேவை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசியலமைப்பை கேலிப் பொருளாக்க வேண்டாம் என்றும், ஊழல், வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை விட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜக ஏன் முயல்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

logo
Kalki Online
kalkionline.com