தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

லைநகர் டெல்லியின் முதலமைச்சராக இருந்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். சமீப காலமாக இவருக்கும் டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த மோதலின் உச்சகட்டமாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் பெரிதாகக் கிளம்பியது. இந்த பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும், இட மாற்றம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும்’
என தெரிவித்து தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் நியமனம் குறித்து, துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக மத்திய அரசு அவசர சட்ட மசோதா ஒன்றை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. மேலும், இந்தச் சட்டத்தை நிரந்தரமாக்கும்  முயற்சிகளையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை ஆதரவு உள்ள நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதைத் தடுக்கும் முயற்சியாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஏற்கெனவே முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கோரி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சந்திப்பின்போது டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் அவசர சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com