நீர் வாழ் உயிரினமான மீனுக்கு நிகர் வேறெதுவுமில்லை.

ஜுலை -10, தேசிய மீன் விவசாயிகள் தினம்!
நீர் வாழ் உயிரினமான மீனுக்கு நிகர் வேறெதுவுமில்லை.

சைவப் பிரியர்களுக்கு வரமாக இருப்பது மீன் எனலாம். மலிவான விலையில். மீனின் மணம் சமயங்களில் எரிச்சல் தந்தாலும்,  அதையும் மீறி மீனை வறுத்தோ குழம்பில் போட்டோ உண்ணவே தோன்றும். வைட்டமின் ஏ, டி ஆகிய ஊட்டச்சத்துகளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் மிகப் பெரிய மீன் வகைகளிலிருந்து கிடைப்பதால் மீனை உணவாக உண்ணமுடியாத சைவ உணவு உண்பவர்களும் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துகள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைத்து இதய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதையும் ஓரளவு கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் இந்த மாத்திரைகளுக்கும் மவுசு உண்டு.

கட்லா, ரோகு, பாற, சுறா, கெளுத்தி, அயிரை, வஞ்சிரம், எனப் பலவிதமான மீன் வகைகள் உண்டு. மீன் மார்க்கெட்டில் நுழைந்து மீன் விற்பவர்களிடம் பேரம் பேசாமல் வாங்குபவர்கள் சிலரே. ஏனெனில் அந்த சிலருக்கு மட்டுமே மீனவர்களின் கஷ்டங்கள் தெரிந்துள்ளது எனலாம். உணவுக்காக மீன்கள் கடைக்கு வரும் முன் கடலிலும் ஆற்றிலும் குளங்களிலும் உள்ள மீன்களை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது வலை போட்டுப் பிடித்து வரும் மீனவர்களின் சிரமங்களும் கஷ்டங்களும் அதிகம். ஆனால் வாழ்வாதாரத்திற்கான வழியாக அவர்கள் அறிந்த ஒரே தொழில் மீன் பிடித்தல் மட்டுமே .

    நிலத்தில் பயிரை விளைவிப்பவர்களை விவசாயி என்று சொல்கிறோம். கடலில் மீன்களை அள்ளி வந்து பசியைப் போக்கும் மீனவர்களையும் விவசாயிகள் என்றே சொல்லலாம். இந்த மீனவர்களின் நலனைக் காத்து மீன் வளம் மற்றும் மீன்பிடித் தொழில் மீன்கள் உற்பத்தியைப் பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நாளை தேசிய மீன் விவசாயிகள் தினமாக அறிவித்து கொண்டாடுகிறது  இந்திய அரசு. இந்தியாவில் முக்கியமான மீன் வகைகளின் இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து மீன்வளத்தை முன்னேற்றிய விஞ்ஞானிகளான கேரளாவைச் சேர்ந்த கே.எச்.அலிகுன்ஹி, அசாமை சேர்ந்த எச்.எல்.சவுத்ரி ஆகியோரின் நினைவாக 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 ம் தேதியை தேசிய மீன் விவசாயிகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளைக் கொண்டாடி வருகிறது மத்தியஅரசு.

     கடல்களும் ஆறுகளும் குளங்களும் நிறைந்த இந்தியாவில் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் மீன்பிடித்தல் மற்றும் மீன் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். உலகஅளவில் மீன் உற்பத்தியில் 7.7 சதவீத பங்களிப்புடன் உலகின் நான்காவது பெரிய மீன் ஏற்றுமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். மேலும் நாட்டின் மீன் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதல் ஐந்து இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது.

     கடலில் மீன் பிடிப்போரின் நிலையை நினைத்தால் சமயங்களில் பரிதாபமும் வருகிறது. கடல் சீற்றம் காலநிலை போன்ற சவால்களைக் கடந்து மீன்களைப் பிடித்து வந்தாலும் அந்த மீன்களுக்குசரியான விலை கிட்டாமல் வேதனைப்படும் நிலைக்கும் தள்ளப் படுகிறார்கள். சமயத்தில் மீன்கள் வலையில் சிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவது, மீன்பிடி தடைக்காலங்களில் வருமானமின்றித் தவிப்பது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது நடவடிக்கைக்கு ஆளாவது போன்ற எண்ணற்ற சிரமங்களை சந்தித்து வருகின்றனர் மீனவர்கள் .

        அதே சமயம் எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அது குலத்தொழில் என்பதால் ஆர்வத்துடன் அந்தத் தொழிலில் ஈடுபட்டு வருமானத்தில் நிறைந்து முன்னேறுபவர்களும் உண்டு. அப்படி இந்தத் துறையில் வெற்றிகரமாக செயல்படுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விருதுகள் பரிசுகள் நிதி உதவிகள் அளித்து அவர்களை கவுரவப் படுத்துகிறது மத்தியஅரசு.

    இந்த வருடமும் ஸ்டார்ட் அப் இந்தியா மையம்  மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து மீன்வள சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பாக செயல்பட்ட  12 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்று மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள், மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னிலையில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடைபெறும் தேசிய மீன் விவசாயிகள் விழாவில் கவுரவிக்கப்படுகிறது. மேலும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா திட்டத்தில் தேர்ந்தடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரூபாய் 2 லட்சம் நிதி  உதவியும் அளிக்கப்படுகிறது.

அரசின் சலுகைளை மீனவர்கள் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரம் பெற்று மகிழ வேண்டும். இந்த மீன் பிடித் தொழிலில் உள்ள மீனவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அரசுகளும் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேம்படுத்த உதவ வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com