
அசோக் லேலண்ட் நிறுவனம் பெண்களைக் கொண்டு இயங்கும் புதிய உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் கனரக வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது அசோக் லேலண்ட். இந்நிறுவனம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து செயலாற்றி வருகிறது. மேலும் இந்நிறுவனம் தனது வெளிநாட்டு சந்தையையும் வரிவுப்படுத்த தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் கனரக வாகன உற்பத்தியில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் வகையில், பெண்களைக் கொண்டு இயங்கும் முழுமையான தொழிற்சாலையை தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பு, அசோக் லேலண்ட் நிறுவனம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த தற்போது முக்கியமான செயல்பாடு ஒன்றை முன்னெடுத்து இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் பந்த் நகரில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டும் இயங்கும் கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி இருக்கின்றோம்.
இந்த புதிய தொழிற்சாலையினுடைய அனைத்து செயல்பாடுகளையும் பெண்களே கவனித்துக் கொள்வர். உற்பத்தி, கொள்முதல், தரக்கட்டுப்பாடு ஆய்வு என்று அனைத்து பணிகளிலும் பெண்களே ஈடுபட உள்ளனர். இதன் மூலம் வாகன உற்பத்தி துறையில் பெண்களுக்கான சம உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கான வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் அந்தப் பெண்களுடைய பொருளாதார நிலையும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.