இந்தியாவில் உள்ள நுகர்வோர்கள் வினோதமானவர்கள். சாதாரணமாக தினசரி வேலைகளைக்கூட வித்தியாசமான முறையில் செய்வார்கள். சமீபகாலமாக புதிதாக வாகனங்கள் வாங்குவோர் பலரும் ரூபாய் நோட்டுக்கு பதிலாக நாணயங்களை கொடுத்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது அஸ்ஸாம் இளைஞர் ஒருவரும் சேர்ந்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம், டாரங் மாவட்டம் சிபாஜ்ஹர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சைதுல் ஹக். இவர் புதிதாக ஸ்கூட்டர் வாங்க எண்ணினார். அதற்கான தொகையை அவ்வப்போது நாணயங்களாக சேமித்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்காக நாணயங்கள் மூட்டையுடன் அவர் ஹோண்டா ஷோரூமுக்கு செல்லும் விடியோ வைரலாக டுவிட்டரில் வெளிவந்தது.
அந்த விடியோவில் இரண்டு சக்கர வாகன விற்பனை நிலையத்துக்கு ஹக் நாணய மூட்டையுடன் நடந்து செல்வதும், அங்கு ஸ்கூட்டர் வாங்குவது தொடர்பான ஆவணங்களில் அவர் கையெழுத்திடுவதும், இதைத் தொடர்ந்து ஸ்கூட்டருக்கான விலையாக அவர் கொடுத்த நாணயங்களை ஷோரூமில் உள்ள ஊழியர்கள் எண்ணி சரிபார்ப்பதும் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக முகமது சைதுல் ஹக் கூறுகையில், “நான் போரோகான் பகுதியில் சிறிய கடை வைத்திருக்கிறேன். புதிதாக ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாகும். இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக எனக்கு கிடைத்த காசுகளை சேமித்து வைத்திருந்தேன். இப்போது அதைக் கொடுத்து புதிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளேன். எனது நீண்டநாள் கனவு இப்போது நனவாகியுள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஷோரூம் உரிமையாளர் கூறுகையில், “ வாடிக்கையாளர் ஒருவர் ரூ.90,000 மதிப்புக்கான நாணயங்களுடன் ஸ்கூட்டர் வாங்க வந்திருப்பதாக எனது கடையின் நிர்வாகி என்னிடம் கூறினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நாணயங்களை கொடுத்து வாகனம் வாங்கியது பற்றிய செய்தியை இதுவரை டி.வி.யில்தான் பார்த்திருக்கிறேன். இப்போது எனது நிறுவனத்துக்கே ஒருவர் வந்திருப்பது மகிழ்ச்சிதான். இரண்டு சக்கர வாகனம் வாங்கிய அந்த நபர், விரைவில் நான்கு சக்கர வாகனம் வாங்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
இந்த விடியோவை பார்த்த நெட்டிஸன்கள் பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பலரும் சைதுல் ஹக்கின் பொறுமையையும் செயலையும் பாராட்டியுள்ளனர். இன்றைய உலகில் பலரும் சொகுசுப் பொருள்களை தனிநபர் கடன் பெற்று வாங்குகின்றனர். ஆனால், அஸ்ஸாம் இளைஞர் உழைப்பால் கிடைத்த பணத்தை சேமித்து வைத்து ஸ்கூட்டர் வாங்கி கனவை நனவாக்கியுள்ளார். அவருக்கு பாராட்டுகள். அதுமட்டுமல்ல அந்த ஷோரூமில் விற்பனையாளர்கள் நாணயங்களை பொறுமையாக எண்ணி பெற்றுக்கொண்டதற்கும் எனது பாராட்டுகள் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபர், “வாவ்…. சைதுல் உங்களுக்கு எனது வாழ்த்துகள். உழைப்பால் சேர்த்துவைத்த பணத்தைக் கொண்டு தனித்துவமான முறையில் ஸ்கூட்டர் வாங்கியுள்ளீர்கள். ஜாலியாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.