ஐந்து மாநிலங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பு: பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை மணியா?

ஐந்து மாநிலங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பு:
பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை மணியா?

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டும் என்று கருதும் நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வுக்கு எதிராகவே உள்ளன.

2023 இல் திரிபுரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கான என 6 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. திரிபுராவில் ஒருவழியாக பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. (அங்கு வாக்குச்சதவீதம் குறைந்துள்ளது.) கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்தது. ஹரியாணாவில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பா.ஜ.க., ஜே.ஜே.பி. கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்டாய நிலை ஏற்பட்டது.

தற்போது வெளியான கருத்துக் கணிப்புகளின் படி சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது. மேலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ் கணிசமான இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் அங்கு ஆட்சியமைக்கும் பா.ஜ.க.வின் கனவு தகர்ந்துபோயுள்ளது. மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியமைக்கப்போவது காங்கிரஸா அல்லது பா.ஜ.க. என்று சொல்ல முடியாத இழுபறி நிலை நீடிக்கிறது. மிஜோரம் மாநிலத்தில் இந்த முறை ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தன. ஆனாலும் கருத்துக்கணிப்புகள் வேறுவிதமாக இருக்கின்றன. எல்.பி.ஜி. மற்றும பெட்ரோல் விலை உயர்வு  ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதித்துள்ளது. ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் எல்.பி.ஜி.க்கு கூடுதல் மானியம், பெட்ரோலுக்கான வாட் வரி குறைப்பு என்று பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தின்போது கூறினாலும் இந்த இரண்டின் விலை உயர்வும் நாடு முழுவதும் உள்ள மக்களை பாதித்துள்ளது என்பதுதான் உண்மை. மேலும் பணவீக்கம், விலைவாசி உயர்வும் மக்களை பாதித்துள்ளது.

மறுபுறம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி, இலவச மின்சாரம் மற்றும் இலவச பேருந்துபயணம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி பா.ஜ.க.வுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியை அடுத்து பாடம் கற்றுக்கொண்ட பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்கு நிதியுதவி திட்டத்தை தொடங்கியு சவாலை தணிக்க முற்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்தே பா.ஜ.க. பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இமாச்சலம், பிகார், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு (அதிமுகவுடன் கூட்டணி) என பா.ஜ.க. ஆட்சியை இழந்துள்ளது.

ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் எல்.பி.ஜி. மற்றும் பெட்ரோல் விலைகளை குறைப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின்  கிஸ்ஸான் சம்மான் நிதியை இரட்டிப்பாக்குவதாகவும் கூறியுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் பா.ஜ.க. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் தனது நோக்கத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் ஏற்கெனவே இலவச மின்சாரம் மற்றும் எல்.பி.ஜி. விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொண்டு வருகிரது. இமாசலம், கர்நாடம் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த காங்கிரஸ் இப்போது தெலங்கானாவிலும் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அக்கட்சி மேலும் வலுவடையும்.

இது இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும். மக்கள் நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தேர்தலில் வெல்ல முடியும் என்கிற உண்மையை காங்கிரஸ் புரிந்துகொண்டுள்ளது. இவை கர்நாடக, இமாச்சல தேர்தல்கள் மூலம் நிரூபணமாகியுள்ளன. சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவையும் காங்கிரஸ் கைப்பற்றும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com