மெரீனா கடற்கரையில் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு 2.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, நினைவிடத்தின் மாடல் வெளியானது. உதய சூரியன் போன்ற வளைவுகளைக் கொண்ட நினைவிடத்தின் முன் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் காட்டும் மாடல், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது.
தற்போதைய நினைவிடத்திலிருந்து கடலில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தததுதான் சர்ச்சைக்கு காரணம். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
நினைவுச் சின்னம் அமைய உள்ள கடலோர பகுதிகள், ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக கருதப்படுகின்றன. இது குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய அரசின் அனுமதியும் கிடைத்த காரணத்தால், நினைவுச் சின்னம் கட்டும் பூர்வாங்க பணிகள் ஆரம்பித்துள்ளன. இன்று பொதுமக்கள் கலந்து கொள்ளும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.
கடற்கரையோரம் உருவாக இருக்கும் கருணாநிதியின் பேனா சின்னம் 42 மீ உயரத்தில் 39 கோடி செலவில் சிலை வடிவில் அமைக்கப்பட உள்ளது. சாலையிலிருந்து கண்ணாடி வடிவிலான பாதை வழியாக கடலை சென்றடைந்து, அங்கிருந்து பேனா சின்னத்தின் மீதேறும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது.
இன்றைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் சார்பாக பிரநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று சீமான் அறிவித்திருக்கிறார். எதிர்ப்புகள் இருந்தாலும் ஆளும் தி.மு.க அரசு திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கிறது. ஒரு பக்கம் கடல் வளம் பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழியல் வல்லுநர்களின் கவலை நியாயமானதாக இருந்தாலும், தமிழக அரசின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது போன்ற திட்டங்கள் அவசியமாகிறது.
சுற்றுலா வளர்ச்சிக்கென தமிழ்நாடு அரசு, தனியொரு கொள்கையை வகுக்கவேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் நீண்ட நாளைய கோரிக்கை. கொரானா தொற்று பரவலுக்குப் பின்னர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 77 சதவீதம்குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை சுறுசுறுப்பாக்க இது போன்ற திட்டங்களையும் வரவேற்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.