சில காலங்களுக்கு முன்னர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், தோட்டா காதோரம் உரசி சென்றதால், நூழிலையில் உயிர்த் தப்பினார். அந்தவகையில், தற்போது மீண்டும் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் வருவது போல், அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் வரும். ஜோ பைடனின் பதவிக்காலம் இந்த வருடம் இறுதிக்குள் முடியவுள்ளது. ஆகையால், வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்கவுள்ளார். அதேபோல், அவரை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளார். ட்ரம்பிற்கு சமீபக்காலமாக இடையூறுகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.
அப்படித்தான் ஜூலை மாதம் 14ம் தேதி பென் சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ட்ரம்பின் காதை உரசி தோட்டா சென்றது. இதனால், நூழிலையில் அவர் உயிர்த் தப்பினார். ட்ரம்பை கொலை செய்ய திட்டமிட்டது ஈரான்தான் என்று கடந்த மாதம் அமெரிக்கா தூதரகம் சந்தேகித்தது.
அதேபோல், பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு நபர் ட்ரம்ப் உட்பட அமெரிக்காவின் சில முக்கிய தலைவர்களை கொல்லும் திட்டத்தோடு வந்ததாக சமீபத்தில் போலீஸாரால் பிடிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் மீது கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட சென்றபோது ட்ரம்ப் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தாம் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தாக்குதல் குறித்த விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் வன்முறைகளுக்கு இடமில்லை என்றும் முன்னாள் அதிபரின் பாதுகாப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.