ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

  அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முன்னால் முதலமைச்சருமான மறைந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

பெங்களூரு தனிக்கோர்ட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதால் அவரது பெயர் இந்த தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களில் குறிப்பாக 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அவை நிறம் மங்கி கிழிந்துவிடும் என்றும், அதனால் அவற்றை மட்டும் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்குமாறு அவர் கோரினார். அவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இதையடுத்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பி, தனக்கு உரிய தகவலை வழங்கும்படி மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரினார். அதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com