ஆப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் பல்கலைக்கழகங்களில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் பெண் பேராசிரியர்கள் அல்லது வயதான ஆண் பேராசியர்கள் மட்டுமே பாடங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் வீட்டிற்கு வெளியே பர்தா அணிந்து வரவேண்டும், ஆண் துணையின்றி பயணம் செய்யக்கூடாது என்று தாலிபான்கள் உத்தரவிட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பரம் மாதம் பெண்கள் பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பொது குளியல் அறைகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இப்போது பெண்கள் ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகும் கனவோடு நுழைவுத் தேர்வில் பங்கேற்று உயர்கல்வி பயிலச் சென்ற மூன்று மாதங்களுக்குள் பல்கலைக் கழகங்களில் படிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களின் இரண்டு ஆட்சிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நாடு பழமைவாதத்தை பின்பற்றி வந்த போதிலும் பெண்கள் படித்துவிட்டு அனைத்து துறையிலும் வேலைதேட முடிந்தது.
இப்போது மீண்டும் தாலிபான் ஆட்சியில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு வயது வந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளி கல்வி பயில தடைவிதிக்கப்பட்டுள்ளது. இப்போது பல்கலைக்கழகங்களில் மாணவிகள் படிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தாலிபான் அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. உலக நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களை முன்வைத்தன. ஆனாலும் தாலிபான் ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே தாலிபான் அரசு, ஆப்கன் பெண்கள் உயர்கல்வி கற்க முழுமையாக தடைவிதிக்கப்படவில்லை என்றும் தற்போது பெண்கள் கல்வி கற்பது சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
பெண்கள் கல்வியை தடுப்பது எங்கள் நோக்கமல்ல. அதற்கு எதிரானவர்களும் அல்ல, தற்போது கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. விரைவில் நிலைமை சீர்திருந்தியதும் மீண்டும் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சுஹைல் ஷாஹின் தெரிவித்துள்ளார். எனினும் பெண் கல்வி தடை செய்யப்பட்டதற்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதாக இருந்த கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா புறக்கணித்துள்ளது. மகளிர்க்கு எதிரான உரிமை மீறல்கள் அதிகமாக நடந்து வருவதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று காரணம் கூறியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை எதிர்க்கும் விதமாக தான் Big Bash Leagueல் விளையாடுவதை தவிர்த்துவிடுவேன் என்று பயமுறுத்தியிருக்கிறார்!