காட்டு பன்றி மோதி கவிழ்ந்த ஆட்டோ ...ஓட்டுனர் பலி... பள்ளி மாணவிகள் காயம்!

காட்டு பன்றி மோதி கவிழ்ந்த ஆட்டோ ...ஓட்டுனர் பலி... பள்ளி மாணவிகள் காயம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ திடீரென சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும், 7 மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இடைச்சியூரணி கிராமத்தை சேர்ந்த 7 மாணவிகள், கமுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் ஆட்டோ மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 7 மாணவிகளும் நல்லமருது என்பவரது ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பினார்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் நல்லமருது பலத்த காயமடைந்தார். பள்ளி மாணவிகள் 6 பேருக்கு லேசான காயமும், ஒருவருக்கு முகத்தில் காயமும் ஏற்பட்டது. விபத்தை கண்டு அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே நல்லமருது பரிதாபமாக உயிரிழந்தார்.

6 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பள்ளிக்கு சென்றனர். ஒரு மாணவி மட்டும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த கமுதி போலீசார், பலியான மருதுபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com