சமீபகாலமாக புவியெங்கும் பரவியுள்ள மாசுகளை அப்புறப்படுத்த பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி மாசில்லா உலகம் படைக்க முயன்று வருகிறோம். பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை அகற்றுவது இந்த முயற்சியின் முக்கிய அம்சமாகும்.
நாம் கடைகளுக்கு சென்று பொருள் வாங்குவது முதல் வீட்டுத் தேவைகள் அனைத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது பிளாஸ்டிக். இதையும் சிறிது சிறிதாக தவிர்த்து வருவதில் அரசு எடுக்கும் முயற்சியில் ஒன்றுதான் அந்தக்காலத்தில் பயன்படுத்திய துணியாலான மஞ்சள் பைகள் . அவ்வழியில் சேலத்தில் மஞ்சள் பைகளை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரங்களை மக்களின் பயன்பாட்டுக்காக ஆட்சியர் துவங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாக பகுதிகளில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் தனியார் பங்களிப்பு மூலம் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த இயந்திரத்தின் செயல்பாட்டினை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் கார்மேகம் பேசுகையில்,
“மாவட்டத்தில் முதற்கட்டமாக ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மூன்று தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை எந்திரங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலமான ஏற்காடு போன்ற முக்கிய இடங்களில் உள்ள வணிகவளாக பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் 10 ரூபாயை நாணயமாகவோ ரூபாய் நோட்டாகவோ அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயமாகவும் செல்போனிலிருந்து மின்பண பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தி மஞ்சப்பையினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் இது போன்ற இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமின் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர் . மிகச் சிறப்பானதொரு முயற்சி பாராட்டுவோம். பயன்படுத்துவோம்.
அரசின் இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்தும்போது பலருக்கும் வாழ்வாதாரம் கிடைப்பதுடன் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மாசுக்கட்டுபாட்டுக்கு உதவும் நோக்கமும் நிறைவேறும்.