பறவைக் காய்ச்சல் பீதி; உலக நாடுகள் அச்சம்!

பறவைக் காய்ச்சல் பீதி; உலக நாடுகள் அச்சம்!

முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பையும், பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டோம் என உலக நாடுகளே பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய காய்ச்சல் ஒன்று மீண்டும் மனித சமூகத்தை அச்சம் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

சமீபத்தில் சீனாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு 56 வயது பெண்மணி ஒருவர் இறந்துள்ளார். இந்தக் காய்ச்சல் H3N8 எனும் வைரசால் பரவுகிறது. இந்த வைரஸ் பறவைகளையும், கால்நடைகளையும் மட்டுமே தாக்கி வந்த நிலையில் முதல் முறையாக மனிதர்களைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புதான் பறவை காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

இது சம்பந்தமாக விஞ்ஞானிகள் கூறுகையில், "சீனாவில் மட்டும் இதுவரை மூன்று பேர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொதுவாக, பறவை காய்ச்சல் மனிதர்களிடம் பரவாது. ஆனால், இது தற்போது மனிதர்களிடம் பரவியிருப்பது குறித்து தீவிரமான ஆய்வை மேற்கொண்டோம். ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, முதல் தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு ஏற்பட்டிருக்கிறது. இது முதலில் ஒரு குழந்தையைதான் பாதித்தது. பின்னர் மற்றொரு குழந்தையையும் பாதித்திருக்கிறது. இந்த இரண்டு பாதிப்புகளும் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு குழந்தை தீவிர சுவாசக் கோளாறு காரனணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்தக் குழந்தையை பரிசோதித்ததில் குழந்தையின் ரத்தத்தில் H3N8 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தையின் பின்னணி குறித்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, குழந்தையின் குடும்பம் கூட்டுக் குடும்பமாகும். அவர்கள் தங்கள் தோட்டத்தில் பறவை பண்ணையை வைத்திருந்தனர். மேலும் ஏராளமான காட்டுப் பறவைகளும் இவர்கள் வீட்டின் தோட்டத்தில் வந்திருக்கிறது. இதன் மூலம் வைரஸ் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல 2022ம் ஆண்டு மே மாதம் மற்றொரு குழந்தையிடம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இக்குழந்தையும் கோழிப் பண்ணைக்கு அருகில் வசித்து வந்திருக்கிறது. தற்போது இரண்டு குழந்தைகளும் குணமடைந்துள்ளன.

அதைப்போலவே குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த இந்த 56 வயது பெண்மணி தீவிர நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்ததில் அவருக்கும் H3N8 பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற இரண்டு நோயாளிகளை போலவே இவரது வீட்டின் அருகேயும் கோழி பண்ணை மற்றும் காட்டு பறவைகளும் அதிக அளவில் இருந்ததுள்ளன. இவர் கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் பயப்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அதாவது இந்த H3N8 வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. இருப்பினும் உயிரிழந்த பெண்மணியின் இருப்பிடம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றன. அவற்றையெல்லாம் நம்ப வேண்டாம். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில அறிகுறிகள் இருக்கும். அதை வைத்து இந்த பாதிப்பை உறுதி செய்துகொள்ளலாம். H3N8 வைரஸ் பாதிக்கப்பட்டால் சுவாச பாதிப்பு இருக்கும். மேலும் காய்ச்சலும் தீவிரமாக இருக்கும். இதுதான் இதன் அறிகுறிகள். எனவே, சாதாரண காய்ச்சலுக்கு பயப்படாமல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என்று கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com