

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட , நௌகாச்சியா அலுவலக பகுதியில் திடீரென நூற்றுக்கணக்கான காகங்கள் கொத்து கொத்தாக தரையில் விழுந்து இறந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்கியது. எந்த காரணத்தினால் காகங்கள் இப்படி கொத்துக்கொத்தாக உயிரிழந்தன? என்பதை பற்றி விசாரணை தொடங்கியது.
நௌகாச்சியா துணைப்பிரிவு அலுவலக வளாகப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் சுமார் 200க்கும் மேற்பட்ட காகங்கள் கீழே விழுந்து இறப்பதை கண்டனர். மேலும் பல காகங்கள் பறக்க முடியாமல் உயிருக்கு போராடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திடீரென்று பறவைகள் மடிவதை கண்ட மக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் செய்தனர். இந்த தகவல் வேகமாக பரவி, பீகார் மாநிலம் முழுக்க மக்களிடையே ஒரு பீதியை கிளப்பியுள்ளது.
தகவல் அறிந்த வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த காகங்கள் உடனடியாக பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன. இந்த இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய, வனத்துறை மற்றும் கால்நடைத் துறையினர் இணைந்து காகங்களின் உடல் மற்றும் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர். முதற்கட்டமாக இந்த ரத்த மாதிரிகள் பாட்னாவிற்கும், அடுத்தகட்ட உறுதிப்படுத்துவதற்காக கோபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கும் (NIHSAD) அனுப்பப்பட்டன. சோதனைகளின் முடிவில் பறவைகள் தீவிர பறவை காய்ச்சல்(Avian Influenza) காரணமாகவே உயிரிழந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. போர்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட நௌகாச்சியா துணைப்பிரிவு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகள் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பறவை காய்ச்சல் பறவைகளுக்கு எளிதில் பரவக்கூடியது என்பதால் , காகங்களிடமிருந்து இந்த காய்ச்சல் வீட்டு பறவைகளான கோழிகளுக்கும் பரவி இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதனால் மாநிலம் முழுக்கவும் கோழி பண்ணைகளில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் 'பூஜ்ஜிய கண்காணிப்பு' முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மீண்டும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து பொது சுகாதாரத் துறையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த களமிறங்கியுள்ளது.
காகங்கள் இறந்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களின் உடல் நிலையை , சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தாலும் , மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு மாநில அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் தேவையின்றி இது பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. இறந்த அல்ல நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ள எந்த ஒரு பறவையும் வெறும் கைகளால் தொடக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பறவைகள் அசாதாரண முறையில் கூட்டமாக உயிரைப்பதை கண்டால் உடனடியாக உள்ளூர் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துமனைக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.