தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது! பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம்!

தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது!  பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம்!
Published on

தமிழ்நாடு முழுவதும் தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவிற்கு பால் கையிருப்பு உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனிடையே இது குறித்து அமைச்சர் நாசர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் ஆவின் பால் விலை குறைவாகவே உள்ளது. இதனால் மக்கள் ஆவின் பாலை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சில தனியார் பால் நிறுவனங்கள், தமிழக பால் உற்பத்தியாளர்களிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதே இந்த பிரச்சினைக்குக் காரணம் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தமிழ்நாடு முழுக்க 9,843 தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. அதில் எல்லையோர மாவட்டங்களில் சுமார் 2,000 பால் உற்பத்தி சங்கங்கள் உள்ளன.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை என்கிறார்கள்.

ஆவின்
ஆவின்

இந்த பால் உற்பத்தி சங்கங்கள் தங்கள் பாலை அதிக விலைக்குத் தனியார் நிறுவனங்களுக்கு விற்கிறது. இதன் காரணமாகவே ஆவின் பால் கொள்முதல் சற்று குறைந்துள்ளது. பால் விநியோகம் திடீரென குறைந்தது குறித்து விளக்கம் கேட்டு 2,000 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்குப் பால்வள மேம்பாட்டுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்தச் சங்கங்களில் ஏதேனும் சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அவற்றைக் கலைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தமிகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று பால் வழங்கப்படவில்லை என நலச் சங்கத்தினார் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் இதற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவிற்கு பால் கையிருப்பு உள்ளது. தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிமுகவினரின் தூண்டுதலின் பெயரில் இதுபோன்று சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com