இணைய வழி பண மோசடிகள் பற்றி 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் இழப்பை தவிர்க்கலாம் - சைபர் கிரைம்!

இணைய வழி பண மோசடிகள் பற்றி 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் இழப்பை தவிர்க்கலாம் - சைபர் கிரைம்!

இணைய வழி மூலமாக ஏதாவது பண மோசடி நடந்து, பணத்தை இழக்க நேரிட்டால் 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்து மீட்கலாம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், சைபர் கிரைம் பிரிவில் செய்யப்பட்டுள்ள பல மாற்றங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை பற்றியும் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள பணியிடங்களில் குறித்து பேசியவர், சமீபத்தில் தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ள புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டார். தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள 16 சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் 26 முக்கிய சோதனை சாவடிகளில் ஆயுதமேந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது தவிர பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் உதவி என்னும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் காவல்துறை சார்ந்த 66 சேவைகள் இருப்பதாகவும் பொதுமக்கள் எளிதாக இணைய வழியில் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தமிழக காவல்துறை சார்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இணைய வழியில் நடைபெறும் பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் 190 என்ற கட்டுப்பாட்டு எண்ணில் புகார் அளித்தால், பண பரிமாற்றத்தை தடுக்க முடியும் என்றும் பண இழப்பையும் தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சைபர் கிரைம் குழுவை நவீனமாக்கும் பணிகள் நடந்த முடிந்திருக்கின்றன. தமிழ்நாடு காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவு ஆரம்பித்து 20 ஆண்டுகளாகிவிட்டது. பெரும்பாலான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தனியார் நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிய சூழல் இருந்தது.

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாரன்சிக் வொர்க் ஸ்டேஷன், பாரன்சிக் டிஸ்க் இமேஜிங் டிவைஸ், ரைட் பிளாக்கர், டிஸ்க் பாரன்சிக் சாப்ட்வேர் உள்ளிட்டவற்றோடு ஏறக்குறைய 16 மென்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. தகவல்கள் அழிக்கப்பட்டாலும் அவற்றை திரும்பப் பெற்று ஆய்வு செய்வதற்கு ஏற்றது போல் டேட்டா எஸ்ட்ரக்ஷன் சாப்ட்வேர் உள்ளிட்டவையும் சைபர் கிரைம் குழுவிற்காக பெறப்படுகின்றன.

கடந்த 15 மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதிலிருந்தும் 80 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இணைய வழியில் பணத்தை இழந்தது தொடர்பானவை. இதன் மூலம் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சைபர் கிரைம் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 190 கட்டுப்பாட்டு எண்ணை முறையாக பயன்படுத்துவதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பை தடுக்க முடியும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com