அட! இந்த கோடீஸ்வரர் செல்போன் பயன்படுத்துவதில்லையாம்!

அட! இந்த கோடீஸ்வரர் செல்போன் பயன்படுத்துவதில்லையாம்!

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தமது குழந்தை கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சிறுவயதில் இருக்கும் தமது படத்துடன், சகோதரர் ஜிம்மி டாடாவின் படத்தையும் வெளியிட்டிருந்தார். கோடீஸ்வரரான ரத்தன் டாடா பகிர்ந்து கொண்ட அந்த கறுப்பு வெள்ளை புகைப்படம் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.

70 லட்சம் பேர் பின்தொடரும் அந்த இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தின் கீழ் ரத்தன் டாடா “அந்த நாள் மகிழ்ச்சியான நாட்கள், எங்களுக்குள் (எனது சகோதரர் ஜிம்மியுடன்) எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜிம்மிடாடா டாடா சன்ஸ் மற்றும் இதர டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர். ஆனாலும் ரத்தன் டாடாவைப் போல ஜிம்மி, தன்னை ஒரு கோடீஸ்வரராக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

கொலாபாவில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.

பொது வாழ்க்கையிலிருந்து அவர் சற்று ஒதுங்கியே இருக்கிறார். 82 வயதான அவர் செல்போன் வைத்துக்கொள்ளவில்லை. அதனாலேயே அவர் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருக்கிறார். இதுவே அவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க உதவுகிறது என்கிறார்கள்.

ஜிம்மி டாடாவைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. ஆனால், 2020 ஆம் ஆண்டு ஆர்.பி.ஜி. குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, ஜிம்மி டாடாவின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு அவரை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். “மும்பையின் கொலாபாவில் ஒரு சிறிய வீட்டில் எளிமையாக வாழ்ந்துவரும் இவரைத் தெரியுமா? இவர்தான் தொழிலதிபரும், கோடீஸ்வரருமான ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜிம்மி ஸ்குவாஷ் விளையாட்டில் சிறந்தவர். என்னை பலமுறை தோற்கடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். டாடா குழுமம் எப்போதும் விளம்பரத்தை விரும்பாது. அதுபோல் இவரும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள விரும்பாமல் எளிமையாக இருக்கிறார் என்றும் கோயங்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜிம்மி டாடாவுக்கு வர்த்தகத்தில் போதிய ஆர்வம் இல்லை என்றாலும் டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல் மற்றும் டாடா பவர் நிறுவனங்களின் பங்குதாரராக இருக்கிறார். தந்தை இறந்தபின் ரத்தன்ஜி டாடாவின் மனைவி நவபாய் அவரை தத்தெடுத்துக் கொண்டாராம். அவர் நடுத்தர பார்ஸி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கின்றன பத்திரிகை தகவல்கள்.

ரத்தன் டாடாவின் இளைய சகோதரரான ஜிம்மி டாடா, சொந்தமாக ஒரு செல்போன்கூட வைத்துக் கொள்ளவில்லை. ஜிம்மியின் கையெழுத்து கிட்டத்தட்ட ரத்தன் டாடா கையெழுத்து போலவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜிம்மி எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வருவாராம். தம்மை பார்க்க வருபவர்களைக்கூட சந்திப்பதை அவர் தவிர்த்து விடுகிறார் என்கின்ற தகவல் அறிந்த வட்டாரங்கள்.

தந்தையின் கீழ் டாடா குழுமத்தில் ஜவுளி வர்த்தகத்தில் தமது வாழ்க்கையை ஜிம்மி தொடங்கியதாக 2016 ஆம் ஆண்டு ஒரு ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com