"2024 ஜனவரி 1 இல் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம் பக்தர்கள் தரிசனத்துக்கு திறந்துவிடப்படும்" ஜன விசுவாச யாத்திரை துவக்கத்தில் அமித்ஷா!

அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம்
அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம்

பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. இப்போதிலிருந்தே தனது தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து ஆளும் பா.ஜ.க. அரசு தேர்தல் பிரசாரத்தை துவக்கும் முகமாக ரதயாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் திரிபுராவுக்கு இரண்டுநாள் பயணமாக வந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சப்ரூம் என்னுமிடத்தில் பா.ஜ.க.வின் ரதயாத்திரையை தொடங்கிவைத்துப் பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் திரண்டு வந்திருப்பதை பார்க்கும்போது வரும் தேர்தலில் திரிபுராவில் பா.ஜ.க. மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகிறது.

முந்தைய ஆட்சியில் ஊடுருவல், பயங்கரவாதம், ஊழல், ஆள்கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்திருந்தன. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்படுமா இல்லையா என்ற கேள்வி நீண்டகாலமாக மக்கள் மனதில் இருந்து வந்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதிலும் அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் எடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம்.

ஆனால், நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ஆலயம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

ஸ்ரீ ராமர் ஆலயம் கட்டப்படும் என்று நாங்கள் தெரிவித்தபோது, 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி, அதற்கான தேதியை உங்களால் தெரிவிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் அதற்கான தேதியை அப்போது நிர்ணயிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் ராகுலுக்கு சொல்ல விரும்புவதெல்லாம், அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் தரிசனத்துக்காக 2024 ஜனவரி 1 இல் திறக்கப்படும் என்பதுதான் என்றார்.

இந்த யாத்திரைக்கு “ஜன விசுவாச யாத்திரை” என பெயரிடப்பட்டுள்ளது. எட்டு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த ரதயாத்திரை வரும் ஜனவரி 12 இல் அகர்தலாவில் முடிவடைகிறது. பா.ஜ.க. தேசியச் செயலர் ஜே.பி.நட்டா நிறைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளையும் வலம் வரும் வகையில் இந்த யாத்திரை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com