முதலமைச்சர் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பின் பின்னணி!

முதலமைச்சர் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பின் பின்னணி!

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட இருக்கும் நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். முதலமைச்சர் நிதியமைச்சரின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் மிக்கதாகப் பார்க்கப்படுகிறது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல பொருளாதார நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாகத் தொடர்புடைய இரண்டு ஆடியோக்களை வெளியிட்டு தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். முதல் ஆடியோவில் திமுகவைச் சேர்ந்த சிலர் இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியிருந்ததாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோவும் அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது.

’’இந்த ஆடியோவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. அது புனையப்பட்டிருக்கிறது. அதோடு, திமுகவின் நல்லாட்சியை சீர்குலைக்கும் பாஜகவின் மலிவான தந்திரம் இது’’ என்றும் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், "ஆடியோ விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் சென்றால் அது எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுப்பதற்குத் தான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். அதனால் இந்த ஆடியோ விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் நிதி அமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து, இந்த ஆடியோ சம்பந்தமான தனது தரப்பு விளக்கத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து வந்த நாட்களில் தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் பெறும் எனவும் பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று, முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மறுபடியும் சந்தித்துப் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலைதமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் இந்த சந்திப்பு ஒரு சாதாரண சந்திப்புதான் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com