
விமானத்திலுள்ள பெரும்பாலான இருக்கைகள் முன்பக்கத்தை பார்த்தவாறு அமைந்திருக்கும். பின்பக்கத்தை பார்த்தவாறு இருக்கைகள் இருப்பது மிகவும் அரிது. ஆனால் ஒரு சில விமானங்களை மட்டும் பிசினஸ் கிளாஸில் பின்பக்கத்தைப் பார்த்தவாறு இருக்கைகள் இருக்குமாம்.
இந்த இருக்கையில் அமர்ந்து பயணிப்பது பயனர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான பயண அனுபவத்தை அளிக்கும் என, இதில் பயணித்த சிலர் கூறுகின்றனர். அவர்களுடைய கருத்துக்களின்படி பலரும் விமானத்தின் பின்பக்கத்தை பார்த்தவாறு பொருத்தப்பட்டிருக்கும் இருக்கையில் பயணிக்க அதிகம் விரும்புகிறார்கள் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த பின்புறத்தை நோக்கிய இருக்கையில்?
விமானங்கள் பொதுவாகவே பூமியிலிருந்து பல அடி உயரத்தில் பறக்கும். அவ்வாறு பறக்கும் நிலையில் இந்த பூமியின் அழகை உங்களால் பார்த்து ரசிக்க முடியும். மேலும் பின்புறத்தை நோக்கிய இருக்கையில் அமரும்போது விமானத்தில் இரண்டு பிரம்மாண்ட என்ஜின்களையும் அதன் இறக்கைகளையும் தெளிவாகப் பார்க்க முடியுமாம். குறிப்பாக விமானங்கள் திரும்பும் போது இறக்கைகள் எப்படி இயங்குகிறது என்பதையும், என்ஜின்களிலுள்ள விசிறிகள் இடைவிடாமல் சுற்றிக்கொண்டிருப்பதையும் தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் இந்த காட்சிகளை முன்னோக்கி பார்த்தவாறு பொருத்தப்பட்டிருக்கும் இருக்கைகளில் காண முடியாது. இந்த காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கும்படியாகவே இருப்பதாக அதில் அமர்ந்து பயணித்த சிலர் தெரிவிக்கின்றனர்.
விமானங்கள் வானில் பறக்கும்போது இரண்டு டிகிரி ஏற்றமான கோணத்திலேயே இருக்கும். தரையிறங்கும் போது மட்டுமே விமானத்தின் முன் பகுதி கீழ்நோக்கியவாறு இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில், நீங்கள் பின்னோக்கி பார்த்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தால், எவ்விதமான அசௌகரிய உணர்வையும் நீங்கள் உணர மாட்டீர்கள். நம் இருக்கையானது லேசாக மேலிருந்து கீழாக சாய்ந்திருந்தாலே நாம் படுத்திருக்கும் சமயத்தில் நல்ல உணர்வை அது ஏற்படுத்தும்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகள் விமானங்களில் பயணம் செய்கின்றனர். இதில் ஒரு சிலர் மட்டுமே பின்னோக்கிய இருக்கைகளை விரும்பி தேர்வு செய்கிறார்களாம். ஒவ்வொரு முறை விமானம் டேக் ஆஃப், மற்றும் தரையிறங்கும்போது ஒரு தனித்துவமான உணர்வை அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் பெறுவதாக அதில் பயணித்தவர்கள் கூறுகிறார்கள். இந்த உணர்வை அனுபவித்தவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பின்னோக்கிய இருக்கையை அதிகம் விரும்பி புக் செய்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
பலருக்கு இந்த இருக்கையில் பயணிப்பது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் பயணித்தவர்கள் நல்ல உறக்கத்தையும், காட்சிகளையும், சிறப்பான அனுபவத்தையும் பெற முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் நீங்கள் யாராவது பின்னோக்கிய இருக்கையில் அமர்ந்து சென்ற அனுபவமிருந்தால், அது சார்ந்த தகவல்களை கமெண்ட் பகுதியில் தெரிவிக்கலாம்.