தமிழகத்தில் பல இடங்களில் ஸ்கரப் டைபஸ் என்ற பாக்டீரியா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது தொடர்பான முழு செய்தியையும் பார்ப்போம்.
ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா நோய்த்தொற்றுள்ள லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இது பரவுமாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டு உயிரைப் பறிக்குமாம். கடந்த 2019ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் இந்த நோய் பரவல் இருந்ததற்கான பேச்சு அடிபட்டது. ஆனால், இதனை கொரோனா என்று நினைத்துவிட்டனர். இதன்பின்னரே இது ஒரு மர்மக் காய்ச்சல் என்று கண்டறியப்பட்டு டெஸ்ட் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இதன்பின்னரே இது ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று என்பது தெரியவந்தது.
தமிழகத்தில் இந்த நோய் பரவி வருவதை அடுத்து தேசிய சுகாதார நிறுவனம் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நேரங்களில் சொறி போன்றவையே இந்த நோயின் அறிகுறிகளாகும்.. நோய் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம்.
மிக கடுமையாக தாக்கப்பட்டால் பிற உறுப்புகள் செயலிழப்பு கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கண்டிப்பாக இந்த தொற்று பரவுவதைத் தடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தொற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற இடங்களில் பரவுகிறது.
குறிப்பாக இத்தகைய தொற்று கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், அதிக பாதிப்பு காணப்படுகிறது. விவசாயிகள், புதர் மண்டிய, வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் அளித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படியும் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால், ரத்த நாளம் வழியே திரவ மருந்துகள் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.