"மோசமான ஆடைகள்" அணிந்த பெண்கள் ராமாயணத்தின் 'சூர்ப்பனகா' போல இருப்பதாக பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ளார்.
வியாழக்கிழமை அனுமன் மற்றும் மகாவீர் ஜெயந்தியை யொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட மத விழாவில் அவர் தெரிவித்த கருத்துகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
"நான் இரவில் வீட்டிற்குச் செல்லும்போது, படித்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் போதையில் இருப்பதைப் பார்க்கிறேன். காரில் இருந்து இறங்கி அவர்களை ஐந்து முதல் ஏழு முறை அறைந்து அவர்களை நிதானப்படுத்த வேண்டும்" என்று பாஜக தலைவர் கூறினார்.
"நம் நாட்டில் பெண்களை தெய்வமாகப் பார்க்கிறோம். ஆனால், மோசமான ஆடைகளை அணிந்து திரியும் பெண்களைப் பார்த்தால் அவர்கள் தெய்வங்களாகக் காட்சியளிக்கவில்லை, சூர்ப்பனகையைப் போல காட்சியளிக்கிறார்கள். கடவுள் உங்களுக்கு நல்ல அழகான உடலைக் கொடுத்திருக்கிறார், நன்றாக உடுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே," என்றார். .
இந்தியா மட்டுமல்லாமல் தெற்கு ஆசியாவிலுள்ள பல நாட்டு காவியங்களில் பிரதான இடம் வகிக்கும் மூல ராமாயணத்தின்படி , சூர்ப்பனகா அசுர மன்னன் ராவணனின் சகோதரி என்பது அனைவரும் அறிந்த செய்தி!
ராமாயணக் கதையின் படி சூர்ப்பனகை அகங்காரம் மற்றும் பொறாமையின் மொத்த உருவமாகச் சித்தரிக்கப் பட்டிருப்பாள். அத்தகைய குணங்கள் கொண்ட சூர்ப்பனகையுடன் மோசமான ஆடையணிந்த பெண்களை ஒப்பிட்டுப் பேசி இருப்பது பெண்களிடையே சற்று அனலைக் கிளப்பி இருப்பது உண்மை. ஏனெனில், ஆடை விஷயங்களில் அடுத்தவர் தலையீடு கூடாது என சுதந்திரப் போக்கு கொண்ட செல்ஃப் மேட் பெண்கள் பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். “என் ஆடை என்னுரிமை, என் உணவு என் உரிமை” எனும் கோஷங்கள் வலுத்து வரும் இந்தக் காலத்தில் பெண்களின் ஆடை குறித்து பாஜக தலைவர் பேசி இருப்பது பொதுவெளியில் பலவிதமான காரசார விவாதங்களைக் கிளப்ப ஏதுவாகிறது என்பதே நடுநிலைவாதிகள் கருத்து.