கலாஷேத்ரா ஹரிபத்மனுக்கு  ஜாமீன்: மனக்குமுறலில் மாணவிகள்!

கலாஷேத்ரா ஹரிபத்மனுக்கு  ஜாமீன்: மனக்குமுறலில் மாணவிகள்!

சென்னை, திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கலாஷேத்ரா கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரிபத்மனை கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி கைது செய்தனர்.

தான் குற்றமற்றவர் எனக் கூறி இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இந்த நிலையில் மே மாதம் முதல் வாரம் ஹரிபத்மன் ஜாமீன் கோரி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணையை ஜூன் மாதம் மூன்றாவது வாரத்துக்கத் தள்ளி வைத்தது. அதைத் தொடர்ந்து ஹரிபத்மன் தனது மனுவை வாபஸ் பெற்றார். அதையடுத்து, ஹரிபத்மன் மீண்டும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஹரிபத்மன் தரப்பில், ‘சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூன் மாதம் 3ம் தேதி தனக்கு ஜாமீன் வழங்கி விட்டதாகவும், எனவே இந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்’ என்றும் கோரப்பட்டது. அதையடுத்து, ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற அனுமதி தந்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டு இருக்கிறது.

இதற்கிடையில், சிஆர்பிசியின் 167வது பிரிவின்படி, விசாரணை ஆணையம் குற்றவாளி ரிமாண்ட் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இயல்பாகவே ஜாமீன் கிடைக்கும் என்பது விதி. அதன்படி, கலாஷேத்ரா பாலியல் வன்கொடுமை சர்ச்சையில் சிக்கிய நடன ஆசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார் செய்த முன்னாள் மாணவி மட்டுமின்றி, இந்த கல்லூரியில் படித்த, படிக்கும் நிறைய மாணவிகள் தங்களுக்கும் இவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ‘தங்களுக்கு நீதி கிடைக்கும், பாலியல் தொந்தரவு கொடுத்த ஹரிபத்மன் தண்டனைக்கு உள்ளாவார்’ என்று எதிர்பார்த்திருந்த மாணவிகளுக்கு, அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்திருப்பது பெரும் மனக் குமுறலை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com