ஆர்எஸ்எஸ் அமைப்பு
ஆர்எஸ்எஸ் அமைப்பு

ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளத்தை முடிந்தால் தடை செய்யுங்கள்: காங்கிரஸுக்கு பொம்மை சவால்!

கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடைவிதிக்க தயாரா என்று கேட்டு பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை காங்கிரஸுக்கு சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் பழிவாங்கும் அரசியல் நடத்தி வருவதாக குறிப்பிட்ட பொம்மை, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடைவிதிக்க முயன்றால் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங் கார்கே, கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்க முயன்றால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை,  “காங்கிரஸ், மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றட்டும். அதை விடுத்து அக்கட்சி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட முயற்சிப்பதாகத் தெரிகிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் காங்கிரஸ் கவனம் செலுத்தட்டும் என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தளத்தை தடை செய்வது பற்றி காங்கிரஸார் பேசி வருகின்றனர். இதைச் சொல்ல அவர்கள் யார்? அவர்களுக்கு சவால் விடுகிறேன். முடிந்தால் அவர்கள் அவற்றை தடை செய்யட்டும். எந்த ஒரு அமைப்பும் தடை செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. மத்திய அரசுதான் இது குறித்து முடிவு செய்ய முடியும். அதுவும் இதர மாநிலங்களின் ஆலோசைக்கு பிறகுதான் அந்த முடிவு எடுக்க முடியும் என்று பொம்மை சுட்டிக்காட்டினார்.

ஒருபுறம் வாக்காளர்களில் ஒரு பிரிவினரை திருப்திபடுத்த காங்கிரஸ் அமைச்சர்கள் இதுபோன்று அறிக்கை விடுகிறார்கள். மற்றொருபுறம் இந்துத்துவா கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்களை அச்சுறுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அல்லது பஜ்ரங்தளத்தை தடை செய்வது குறித்து காங்கிரஸ் அரசின் நோக்கம் என்ன என்பதை முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்த வேண்டும். அவருடைய அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேசியதை ஆதரிக்கிறாரா அல்லது மறுக்கிறாரா என்பதை சித்தராமையா தெளிவாக கூறவேண்டும் என்றார் பொம்மை.

நாட்டை கட்டமைத்தது ஆர்.எஸ்.எஸ்.தான் என்று குறிப்பிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்றும் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை யாராலும் தடை செய்யமுடியாது. அந்த அமைப்பை தடைசெய்ய முயன்ற பலர் தோல்வியைத்தான் சந்தித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வதாக அச்சுறுத்தல் விடுப்பவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பசவராஜ் பொம்மை கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com