

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளர் சையது பாபு தமிழகத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் விஜய் நடித்த படங்களை தியேட்டர்கள், தொலைக்காட்சிகளில் போடக்கூடாது என்ற கோரிக்கையை கடிதம் மூலம் முன் வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை ஜனநாயகன் உட்பட விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களையும் தியேட்டர்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட தடை விதிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி சையது பாபு என்பவர் மனு அளித்துள்ளார். வரும் தேர்தலில் தவெக போட்டியிடுவதால் தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் உள்ள விஜயின் சினிமா பிளக்ஸ்கள் மற்றும் போஸ்டர்களை அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதில் தமிழக வெற்றிக்கழகம் கட்சித் தலைவர் விஜய் முதன் முறையாக களம் இறங்க உள்ளார். இவர் கட்சியின் தலைவர் மட்டுமின்றி நடிகருமானவர் என்பதால், விஜயின் படங்களை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்குள் நுழைந்த நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையால் படம் இன்று வரை வெளியாகவில்லை. கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான இவரது ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் தன்னுடைய கட்சி வேலையில் மும்முரமாக இயங்கி வருகிறார்.
சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன் படம் தற்போது தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
இப்படி ஜனநாயகன் பட ரிலீஸ் விவகாரம் முதல் சிபிஐ விசாரணை, விவாகரத்து வழக்கு என்று ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சையது பாபு விஜய் நடித்துள்ள படங்களை திரையரங்குகளில், தொலைக்காட்சியில் திரையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி அனுப்பியுள்ள கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் இதனை எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!