பல லட்சம் ரூபாயுடன் வங்கிக் கேஷியர் எஸ்கேப்!

பல லட்சம் ரூபாயுடன் வங்கிக் கேஷியர் எஸ்கேப்!
Published on

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் செயல்பட்டு வருகிறது ஒரு இந்தியன் வங்கிக் கிளை. இந்த வங்கியில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார் முகேஷ் என்ற இளைஞர். நேற்று காலை சுமார் 11 மணியளவில் வங்கிக்குப் போன் செய்த இவர், தனக்கு உடல் நலம் சரியில்லை எனவும், மருத்துவமனைக்குச் செல்ல இருப்பதாகவும் அந்த வங்கியின் மேலாளரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் வங்கிக்குத் திரும்பவே இல்லை. அதைத் தொடர்ந்து அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் கொண்ட வங்கி மேலாளர் அவரது பொறுப்பில் இருந்த கேபினை சோதனை செய்தார். அந்த சோதனையில் வங்கிப் பணம் 42,50,000 ரூபாயும், வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்ப வைத்திருந்த 1,39,500 ரூபாயும் என மொத்தம் 43,89,500 ரூபாய் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மேலாளர் வங்கியின் சிசிடிவி காட்சிகளை சோதித்துப் பார்த்தபோது, முகேஷ்தான் அந்தப் பணத்தை எடுத்துச் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர் இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். வங்கி மேலாளர் செய்த புகாரின் அடிப்படையில் போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து, பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற முகேஷைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற முகேஷ், தனது சகோதரிக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ தகவல் ஒன்றை அனுப்பி இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ‘மர்ம கும்பல் ஒன்று தன்னைக் கடத்திச் சென்றுவிட்டதாக’ அவர் அதில் குறிப்பிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடத்தல் தகவல் குறித்தும், வங்கிப் பணம் கொள்ளை போனது குறித்தும் தனிப்படை காவல் துறையினர் கூறுகையில், ‘அது பொய்யான தகவல். முகேஷை யாரும் கடத்தவில்லை. இரு சக்கர வாகனத்தில் அவர் சென்னையை நோக்கி தனியாகத்தான் சென்று இருக்கிறார்’ என்று தெரிவித்து இருக்கிறார்கள். வங்கி கேஷியரே வாடிக்கையாளரின் பல லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com