

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றியமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பொதுத்துறை, தனியார், கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களும் மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கிப் கிளைகளை மூடி, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தைச் செய்யப்போவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் நடக்கின்ற வெள்ளிக்கிழமை 11-ம்தேதி வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமை 12-ம்தேதியும் (இரண்டாவது சனிக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாகும். 14-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுவதால், வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் அனைத்து வங்கிகளிலும் பணப் பரிவர்த்தனைகளும் காசோலைச் செயல்முறைகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான காசோலைகள் பணமாக்கப்படாமல் தேக்கமடையும்.
அதுமட்டுமின்றி பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், அந்நிய செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட வர்த்தக பணிகள் இதனால் பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் ஏ.டி.எம்.களும் முடங்கக்கூடிய நிலை உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை.
அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம், ‘நாடு முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் (வங்கி வேலைநிறுத்தம்) ஈடுபடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, அனைத்து மாதங்களிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், மத்திய அரசு அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது.
மேலும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மற்ற கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நிர்வாகமும் அரசும் தயக்கம் காட்டுகின்றன.
எனவே, நாளை மறுநாள் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டு, ஊழியர்களும் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் வங்கிக் கிளைகள் செயல்படாது; சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். ஏ.டி.எம். மையங்களும் இயங்குவதற்கு வாய்ப்பில்லை’ என்று கூறினார்.
இதற்கிடையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதை தவிர வருகிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தமும் செய்ய இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டம் வார இறுதி விடுமுறை நாட்களில் வருவதால், வாடிக்கையாளர்கள் அவசரப் பணத்தேவைகளை டிஜிட்டல் முறையில் முன்கூட்டியே கவனித்துக் கொள்வது நல்லது.
இதனிடையே, பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் 2 நாட்கள் விடுமுறை முறை, ஓய்வூதியத் திருத்தம் போன்ற முக்கிய விவகாரங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.