கல்யாணி யானைக்குக் குளியல் தொட்டி!

கல்யாணி யானைக்குக் குளியல் தொட்டி!

கோவையை  அடுத்த பேரூரில் பிரசித்திப் பெற்ற பட்டீஸ்வரர் கோவிலில் கோவில் யானைதான் கல்யாணி. இந்த யானை தினசரி குளிக்கவும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள அங்காளம்மன் கோவில் பின்பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் நான்கு அடி உயரத்திற்கு  ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர்கள் நீர் பிடிக்கும் கொள்ளளவில் யானை குளிக்க பிரமாண்ட அளவில் குளியல் தொட்டியும் கட்டப்பட்டது.  

       இதனை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கோவை பேரூர தமிழ் கல்லூரியில் பழனி, திருச்செந்தூர் உள்பட ஐந்து திருக்கோவில்களில் உள்ள அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 84 பேருக்கு கோவில் அருகில் உள்ள பேரூர் சாந்தலிங்கர் மடத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் பேரூர் ஆதீனம் மருதாசலஅடிகளார் சிவதீட்சை  வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி பேசினார்.

     “ 2021 - 22 ஆம் ஆண்டுகளில் அர்ச்சகர் பள்ளி புதிதாக துவங்கியும் ஏற்கனவே இருந்த பள்ளிகளும் புனரமைக்கப் பட்டன. அந்த பள்ளிகளில் ஓதுவார், நாதஸ்வரம், தவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 15 இடங்களில் தொடங்கப் பட்ட பள்ளிகளில் 210 மாணவர்கள் பயின்றனர் இதனால் ஆன்மிகம் காப்பாற்றப்பட்டது.

கோவில்களில் இறைவனுக்கு நிகராக யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்  29 கோவில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த யானைகளுக்கு குளியல் தொட்டி கட்டத் திட்டமிடப்பட்டது. அதன்படி 27 கோவில்களில் உள்ள யானைகளுக்கு குளியல் தொட்டிகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. தற்போது பேரூர் கோவில் கல்யாணி யானைக்கு குளியல் தொட்டி திறந்து வைக்கப் பட்டது. 1500 கோயில்களில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் குட முழுக்கு மற்றும் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 100 கோடி மதிப்புள்ள ஆயிரம் ஆண்டுகள்பழமையான 112 கோவில்களில் புராதான சின்னங்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

      நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா, இணை ஆணையர் பரஞ்சோதி உதவி ஆணையர் விமலா, அறங்காவலர் நியமன மாவட்டக்குழு உறுப்பினர் ராஜாமணி ஆகியோருடன் பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com