சமீபத்தில் நீலகிரி வனப்பகுதியில் அடர்ந்த உட்காட்டில் புலி மற்றும் சிறுத்தையை கொடூரமாக வேட்டையாடிக் கொன்ற பவாரியா கும்பலை கைது செய்திருக்கிறது வனத்துறை. இந்த பவாரியா என்பது ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா பகுதிகளைச் சார்ந்த ஒரு வேட்டைக் கும்பல். இவர்களது பிரதான தொழிலே புலி வேட்டை தான். வேட்டைத் தொழிலை இந்திய அரசு தண்டனைக்குரியதாக ஆக்கியதும் இவர்கள் பிழைக்க வேறு வழியின்றி கொலை, கொள்ளையில் ஈடுபடத் தொடங்கினர். இதை அடிப்படையாகக் கொண்டு தான் சில வருடங்களுக்கு முன்பு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் கூட வெளியானது.
அத்திரைப்படத்தில் காட்டப்பட்டிருப்பதைப் போல பவாரியாக்கள் மிக மூர்க்கமானவர்கள். வரலாற்றுச் சான்றுகளின் படி இவர்கள் ராஜபுத்திரர்களின் எஞ்சிய வம்சாவளியினராகக் கருதப்பட்டாலும் பின்னாட்களில் ஆங்கிலேயர் காலத்தில் குற்றப்பரம்பரையினராக ஆக்கப்பட்டார்கள்.
வாழ வழியின்றி அவர்கள் தங்களுக்கென தேர்ந்தெடுத்த வேட்டைத் தொழிலும் தற்போது சட்ட விரோத நடவடிக்கை ஆன பிறகு கொள்ளைக்காரர்களாகி கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர்களான பவாரியாக்கள் மீண்டும் வேட்டைப் பக்கம் நகர்ந்தது எப்படி என்று தெரியவில்லை. இவர்கள் தாங்களாகவே இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இவர்களை எய்தவர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள். பவாரியாக்கள் தங்கள் எஜமானர்களைக் காட்டித் தரமாட்டார்கள், அவர்கள் வெகு அழுத்தமானவர்கள் என்றொரு பேச்சிருக்கிறது. ஆனாலும் உண்மை கண்டறிய வேண்டுமெனில் அவர்கள் வாய் திறக்க வேண்டும் என்கிறார்கள் போலீஸார்.
தற்போது சத்தியமங்கல வனப்பகுதியில் இவர்களால் நடத்தப்பட்டிருப்பது மிகக் கொடூரமான வேட்டை. முதலில் சிறுத்தையை வேட்டையாடி அதன் தோலை உரிக்க முயன்றிருக்கிறார்கள். தோலில் எங்கும் கிழிசல்கள் இல்லாமல் இருந்தால் தான் சந்தையில் அதற்கு விலை அதிகம் கிடைக்கும். ஆனால், இவர்கள் சிறுத்தையின் தோலை உரிக்கும் போது அது கிழிந்து விடவே, இறைச்சியை மட்டுமே சமைத்துச் சாப்பிட்டு விட்டு எஞ்சிய உடல் பாகங்களை அப்படியே காட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த எச்சங்களைக் கொண்டு தான் இவர்கள் மீது சந்தேகம் கொண்டு தேடத் தொடங்கி இருக்கின்றனர் வனத்துறையினர். அந்த தேடுதல் வேட்டையில் அவர்களுக்கு மேலும் தடயங்கள் சிக்கின. வடமாநில பவாரிய கும்பல் தங்கியிருந்த கூடாரங்களில் ஏராளமான புலி நகங்கள், புலிப் பற்கள், எலும்புகளைக் கண்டு அதிர்ந்து போனது தமிழக வனத்துறை.
இதில் மற்றொரு ஆச்சர்யமான விஷயம். இவர்கள் வேட்டைக்குப் பயன்படுத்துவது பண்டைய கூர்மையான ஆயுத முறைகளைத் தான், துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது இல்லையாம். வேட்டைக்குத் தேவையான கூரிய ஆயுதங்களை அவர்களே உருவாக்குகிறார்கள்.
அத்துடன், இவர்களது கும்பலில் பெண்களும் கண்டிப்பாக பங்கு கொள்கிறார்கள் மிக அதிர்ச்சியான விஷயம். ஏனெனில் சாதாரணமாக யாரும் உள்ளே செல்வதற்கு அஞ்சக் கூடிய அடர்ந்த காட்டுப் பகுதியில் இவர்கள் அசாதாரண முறையில் அச்சமின்றித் தங்குகிறார்கள். இறைச்சிக்காகப் புலியைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை.
வேட்டையாடிப் பிடிபட்ட புலியின் வாயில் கூர்மையான ஈட்டியைச் சொருகி அதைக் கொன்று விட்டு அதன் உடல்பகுதியில் இருந்து தோலை கிழிசல் இல்லாமல் உரித்து எடுக்கிறார்கள். இவர்களது நடமாட்டம் அதிகரித்த பின் சத்தியமங்கல வனப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வெள்ளைப் புலி நடமாட்டம் சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. ஒருவேளை இவர்கள் தான் அதை வேட்டையாடிக் கொன்று விட்டு எஞ்சிய உடல் பாகங்களை உலக கள்ளச் சந்தைக்கு கடத்தி விற்று விட்டாரகளோ என்றொரு சந்தேகம் இருக்கிறது. அதைப் பற்றியும் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்கிறார்கள். வெள்ளைப்புலிக்கு ஜப்பானில் நல்ல மார்க்கெட்டாம்.
முதலில் நீலகிரி வனப்பகுதிக்குள் ஊடுருவி சிறுத்தையைக் கொன்று விட்டு பிறகு சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் ஊடுருவி கொடூரமாகப் புலியைக் கொன்ற வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறோம் என்கிறார்கள் வனத்துறையினர்.
அட பவாரியாக்கள் என்றாலே எப்போதும் ஒரே பயங்கரமாகத்தான் இருக்கிறது.